வழுக்கை - தள்ளிப் போடுவது எப்படி?
வயது, பரம்பரை, ஆன்ட்ரோஜன் ஹார்மோன்... இந்த மூன்றும்தான் வழுக்கைக்கான முக்கியக் காரணங்கள்.
வழுக்கை உள்ள பரம்பரையில் பிறந்தவர்களுக்கு மரபணுக்களில் எந்த வயதில் வழுக்கை விழ வேண்டும் என்று ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும். இதை மாற்ற முடியாது.
வயது ஆக ஆக செல்கள் தங்களை புதுப்பித்துக் கொள்வதை தாமதப்படுத்தும். புதிய செல்உற்பத்தி குறையும். இது தலைமுடிக்கும் பொருந்தும். முதுமையில் வழுக்கை விழும்.
டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோன் (Dihydro testosterone) என்பது ஒரு ஆன்ட்ரோஜன் ஹார்மோன். இது அளவாகச் சுரந்தால் முடி சரியாக வளரும்; அதிகமாகச் சுரந்தால் முடி கொட்டும்.
காரணம், ‘டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோன்’ முடிக்குழிகளைச் சுருக்கிவிடுகிறது. முடியின் வளர்ச்சிப் பருவத்தைக் குறைத்துவிடுகிறது. இதனால், வழுக்கை விழுகிறது.
நமக்கு வயதாவதை எப்படித் தடுக்க முடியாதோ, அப்படித்தான் வழுக்கையும். ஆனால், சீக்கிரத்தில் வழுக்கை விழுவதைத் தடுக்கலாம்; தள்ளிப்போடலாம்.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பது முக்கியம். சருமத்தையும் முடியையும் வறண்டுபோகாமல் வைத்திருக்க, எண்ணெய் நிச்சயம் உதவும்.
ஷாம்பு போட்டுக் குளிக்கக் கூடாது. பதிலாக, சீயக்காய் குளியல் நல்லது. வெயிலில் அதிகமாக அலையக் கூடாது. கடினமான சீப்புகளைப் பயன்படுத்தக் கூடாது.
தலைக்குக் குளித்ததும், முடியை உலர்த்த ‘டிரையர்’ கூடாது. பேன், பொடுகு, பூஞ்சை தொற்றாமல் தலையைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது முக்கியம்.
அடர் பச்சைக் காய்கறிகள், கீரைகள், பேரீச்சை, கேரட், பீட்ரூட், முட்டை, பருப்பு, பால், முழு தானியங்கள், வாழைப்பழம், மீன் போன்ற உணவு வகைகளை சாப்பிடலாம்.