காண்டாமிருகத்துக்கு எத்தனை கொம்பு?

உலகில் வாழும் பெரிய பாலூட்டி வகைகளில் காண்டாமிருகமும் ஒன்று. இது தாவர உண்ணியும்கூட. காண்டாமிருகங்களில் ஐந்து வகைகள் உள்ளன.

காண்டாமிருகம் அரிதான விலங்கு. தற்போது ஆப்பிரிக்கா, இந்தியா, ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன.

ஆப்பிரிக்கக் காண்டாமிருகங்கள் சாம்பல் நிறமுடையவை. இந்தியக் காண்டாமிருகங்கள் ஒற்றைக் கொம்பு கொண்டவை.  

ஜாவா தீவில் உள்ள காண்டாமிருகங்கள் அளவில் கொஞ்சம் சிறியவை. ஒற்றைக்கொம்புதான் உண்டு. சுமத்ரா தீவைச் சேர்ந்த காண்டாமிருகங்கள் அதைவிடச் சிறியவை.  

காண்டாமிருகம் நன்கு தடித்த உறுதியான தோலைக் கொண்டது. இதன் தடிமன் 1.5 சென்டிமீட்டர் முதல் 5 சென்டிமீட்டர்வரை இருக்கும்.  

பெரிய காண்டாமிருகத்தின் எடை 1 முதல் 1.8 டன் வரை இருக்கும். (டன்=1000 கிலோ). மணிக்கு 40 கிலோமீட்டர் வரை ஓடும் ஆற்றல் காண்டாமிருகத்துக்கு உண்டு.

காண்டாமிருகத்துக்கு எளிதில் கோபம் வரும். எதிரிகளை கொம்பினாலேயே தாக்கும். ஆப்பிரிக்கக் காண்டாமிருகத்துக்கு இரண்டு கொம்புகள் உண்டு.

காண்டாமிருகங்களின் கொம்புகள் மருத்துவக் குணம் கொண்டது என்று நம்பப்படுவதால் அதிகம் வேட்டையாடப்படுகின்றன.

குட்டியை 16 மாதங்கள் வரை கருவில் சுமக்கும். தாய் காண்டாமிருகங்கள் 2 முதல் 4 வருடங்கள் குட்டியை தன் கூடவே அழைத்துச் செல்லும்.

குட்டிகள் பெரும்பாலும் தங்கள் தந்தை காண்டாமிருகங்களைப் பார்க்கவே முடியாது. இனப்பெருக்கக் காலம் முடிந்தவுடன் ஆண் காண்டாமிருகம் பிரிந்து சென்றுவிடும்.  

நிலத்தில் வாழும் விலங்குகளில் யானையை அடுத்த பெரிய உயிரினம் வெள்ளைக் காண்டாமிருகங்கள்தான். | தொகுப்பு: ஷங்கர்

Web Stories

மேலும் படிக்க...