விண்வெளியில் எப்படி நடக்கிறார்கள்?
விண்வெளியில் நடப்பது என்பது மிகவும் வித்தியாசமானது. விண்வெளி வீரர் ஆபத்துகளை எதிர்நோக்கிதான் இந்த நடையில் இறங்குகிறார்.
விண்கலத்திலிருந்து வெளியே வந்துதான் விண்வெளி வீரர் நடையை மேற்கொள்கிறார். இது Extravehicular Activity (EVA) செயல்பாடு என்று அழைக்கப்படுகிறது.
விண்வெளி நிலையத்தில் ஏற்படும் கோளாறுகளைச் சரி செய்வதற்கோ, பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வதற்கோ விண்வெளி நடையை மேற்கொள்கிறார்கள்.
விண்வெளி நடை பொதுவாக 5 முதல் 8 மணி நேரம் இருக்கும். பூமியில் இருந்து கொண்டுவந்த கருவிகளைப் பொருத்துவதுதான் இந்த விண்வெளி நடையின் பிரதான நோக்கம்.
விண்வெளி உடை என்பது கிட்டத்தட்ட, சிறிய விண்கலம் போலிருக்கும். விண்வெளியில் நிலவும் கடினமான சூழலைச் சமாளிக்கும் விதத்தில் இந்த உடை வடிவமைக்கப்பட்டிருக்கும்.
விண்வெளி நடை மேற்கொள்வதற்குப் பல மணி நேரத்துக்கு முன்பே இந்த ஆடையை விண்வெளி வீரர்கள் அணிந்துவிடுவார்கள்.
விண்வெளி நடையின்போது விண்வெளி வீரர்களின் உடல் கயிறு மூலம் விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். கயிறு இணைக்காமலும் விண்வெளி நடை மேற்கொள்ளப்படும்.
விண்வெளி நடையின்போது கருவிகள் கைதவறி விழுந்தால், விண்வெளி வீரர்கள் மிதந்து சென்று கருவிகளை எடுத்துவிட முடியும். கயிறு கட்டியிருப்பதால் மிதப்பது எளிது.
கயிறு கட்டாமல் விண்வெளி நடையில் இலக்கை விட்டுத் தவறினால், உடையிலிருக்கும் சிறிய ஜெட் பேக், அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுவிடும். | தொகுப்பு: ஸ்நேகா