உலகின் மிகப் பெரிய பிரமிடு!
எகிப்தில் உள்ள பிரமிடுகளில் மிகவும் பெரியது கிசா. எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு அருகில், நைல் நதிக்கு 5 மைல் தொலைவில் அமைந்துள்ளது.
கிசா பிரமிடுக்குள் குஃபு மன்னரின் கல்லறை இருக்கிறது. இங்கே கல்லறையுடன் ஏராளமான பொருள்களும் ஆபரணங்களும் வைக்கப்பட்டிருந்தன.
குஃபு மன்னரின் உடலோடு வைக்கப்பட்ட பொக்கிஷங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கல்லறையிலிருந்த கொள்ளையடிக்கப்பட்டுவிட்டன.
பிரமிடு கட்டப்பட்டபோது, அது சுமார் 481 அடி உயரம் இருந்தது. இன்று, மேல்பகுதி அகற்றப்பட்டதால் சுமார் 455 அடியாக உயரம் குறைந்துவிட்டது.
பிரமிடு அடிவாரத்தின் ஒவ்வொரு பக்கமும் சுமார் 755 அடி நீளம். 23 லட்சம் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. ஒரு கல்லின் எடை 907 கிலோ.
20 ஆயிரம் தொழிலாளர்கள் 20 ஆண்டுகளில் கிசா பிரமிடைக் கட்டி முடித்துள்ளனர். கட்டும் பணி கி.மு. 2580இல் ஆரம்பிக்கப்பட்டு, கி.மு. 2560இல் நிறைவடைந்தது.
கிசா பிரமிடின் உள்ளே 3 பெரிய அறைகள் உள்ளன. ராஜா அறை, ராணி அறை, பொக்கிஷ அறை எனத் தனித்தனியாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
கிசா பிரமிடுக்கு அருகே இன்னும் 2 பிரமிடுகள் இருக்கின்றன. இவை குஃபு மன்னரின் மகனாலும் பேரனாலும் கட்டப்பட்டவை.
பிரமிடுக்குள் செல்வதற்கும் வெளியே வருவதற்கும் சிறிய சுரங்கப் பாதைகள் இருக்கின்றன.
வெளியில் எவ்வளவு வெப்பநிலை இருந்தாலும் பிரமிடுக்குள் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும்படி கட்டப்பட்டிருக்கிறது
எகிப்தில் இதுவரை 130 பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. | தொகுப்பு: ஆதன்