மன அழுத்தமும்... உடல் எடையும்...
நம் உடலில் அளவுக்கு அதிகமாகக் கொழுப்பு சேர்வதையே உடல் பருமன் என்கிறோம். உடல் பருமன் பல நோய்களுக்கு வழிவகுப்பதால் விழிப்புணர்வு அவசியம்.
அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பதாலும் பதப்படுத்தப்பட்ட உணவு, நொறுக்குத்தீனி உண்பதாலும் உடல் பருமன் உண்டாகலாம்.
மன அழுத்தத்தால் தூக்கமின்மை ஏற்பட்டு கிரெலின் என்கிற பசி ஹார்மோன் அதிகரிக்கும். இதனால், அதிகம் விரும்பிச் சாப்பிடுவர். இது கொழுப்பைச் சேர்க்கிறது.
கட்டுப்படுத்தும் வழிகள்: ஒரு நாளைக்குக் குறைந்தது முப்பது நிமிடங்கள் வரை உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
எளிமையான கார்போஹைட்ரேட் எனப்படும் சர்க்கரை, வெள்ளை அரிசி, மைதா ஆகியவற்றின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும்.
சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த பருப்பு வகைகள், முழு தானியங்கள், புரதம், நார்ச்சத்து கொண்ட உணவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் .
உங்கள் தட்டில் 50% நார்ச்சத்து, 25% புரதம், 25% கார்போஹைட்ரேட் இருப்பதே ஆரோக்கியமான உணவு முறையாகும்.
சாப்பிடும் நேரத்தை முறையாகப் பின் பற்றுங்கள். அது உங்கள் உடல் சரியான நேரத்தில் செரிமானத்தை மேற்கொள்ள உதவும்.
ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் இரண்டு முதல் மூன்று லிட்டர் நீர் அருந்த வேண்டும். தண்ணீர் குடிக்காவிட்டால் அது பசியைத் தூண்டலாம்.
தவிர்க்க வேண்டியவை: வறுத்த உணவில் அதிகப்படியான மாறுபட்ட கொழுப்பு (Trans fat) உள்ளதால் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
தினசரி உடற்பயிற்சிகளைத் தவறாமல் மேற்கொண்டால் உடல் பருமனிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம். | கைடன்ஸ்: எஸ்.சினேகா