சிறுத்தை மரத்தில் ஏறி உண்பது ஏன்?

பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தது சிறுத்தை. அதன் உடல் வேட்டைக்கு வசதியாக உருவானது. நீண்ட தூரத்துக்குத் தாவும் இயல்பு கொண்டது.

ஒரு மணி நேரத்துக்கு 57 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். நீச்சலடிக்கும் திறன் உண்டு. மலைகள், மரங்களில் அநாயாசமாக ஏறக்கூடிய திறன் படைத்தது.

சிறுத்தையின் உடல் நீளத்துக்கு ஏற்றவாறு, அதன் வாலின் நீளமும் அமைந்திருக்கும். வேகமாக ஓடும்போது சட்டென்று திரும்புவதற்கு ஏற்ற சமநிலையை வால் தருகிறது.

வளர்ந்த சிறுத்தைகள் தனியாக வாழக் கூடியவை. ஒவ்வொரு சிறுத்தையும் காட்டின் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இன்னொரு சிறுத்தை அங்கு வருவதை விரும்பாது.  

சிறுத்தைகள் இரவுப் பிராணிகள். இரவில்தான் பெரும்பாலும் இரை தேடும். எப்போதும் தனியாகவே உலாவக் கூடியவை.

வேட்டையாடிய விலங்கைச் சிறுத்தைகள் உயரமான மரத்தில் இழுத்துக் கொண்டு ஏறும். மற்ற விலங்குகள் உணவை உண்ணாமல் இருப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு. 

சிறுத்தை தனது இரையை இரண்டு, மூன்று நாட்கள் வைத்திருந்து உண்ணும். உணவு தீர்ந்த பிறகுதான் சிறுத்தைகள் மரத்திலிருந்து இறங்கும்.

பெண் சிறுத்தைகள் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று குட்டிகளை இடும். குட்டிக்கு இரண்டு வயதாகும்போது அது தனித்துவிடப்படும்.

பெண் சிறுத்தை, ஆண் இணையை ஈர்ப்பதற்குத் தனது உடல் மணத்தைத் தெரியப்படுத்த மரங்களில் உரசி, மணத்தை விட்டுச் செல்லும். | தகவல்கள்: ஷங்கர்

Web Stories

மேலும் படிக்க...