புரோட்டீன் பவுடர் நல்லதா, கெட்டதா?
புரோட்டீன் பவுடர், புரோட்டீன் ஷேக் போன்ற செயற்கை ஊட்டச்சத்து பானங்களைப் பயன்படுத்துவது நல்லது என்று பலரும் நம்புகின்றனர். இது தவறு.
நமக்குத் தினமும் சராசரியாக 50 கிராம் புரதம் அவசியம். இதை நாம் சாப்பிடும் உணவிலிருந்தே பெறலாம்.
சைவம் சாப்பிடுபவர்கள் பால், தயிர், பருப்பு, பயறு, காளான், எண்ணெய் வித்துகள், கொட்டைகள் வழியாக புரதம் பெறலாம்.
அசைவம் சாப்பிடுபவர்கள் மீன், முட்டை, இறைச்சியை உட்கொள்வதன் வழியாகவும் புரதச் சத்தைப் பெறலாம்.
இயற்கை உணவில் புரதச் சத்துடன் நார்ச்சத்து, வைட்டமின், தாது, ஆன்ட்டிஆக்ஸிடன்ட், ஃபிளேவனாய்டு, பைட்டோகெமிக்கல் போன்றவை கிடைக்கும்.
புரோட்டீன் ஷேக் அல்லது பவுடரை உட்கொள்ளும்போது, அதிலுள்ள புரதம் மட்டுமே உடலில் சேரும். மற்ற சத்துகள் சேர வழியில்லை.
செயற்கை பானங்களில் இருக்கிற புரதத்தை உடல் செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால், உடனடியாக வேறு உணவை சாப்பிட முடியாது.
ஜிம்முக்குப் போவோருக்கு புரதம் கூடுதலாக தேவை. அவர்கள் தகுந்த அளவுடன், மற்ற ஊட்டச்சத்துகளும் உடலில் சேருவது பாதிக்காது உட்கொள்ள வேண்டும்.
புரோட்டீன் ஷேக், பவுடரை சத்து தானே என்று அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், சிறுநீரகத்தைப் பாதிக்கும். சிறுநீரகத்தில் கல் உருவாகும்.
புரோட்டீன் பவுடரை அதிகம் உட்கொண்டால், ரத்தத்தில் கொழுப்பு அதிகரித்து, இதயநோய்க்குப் பாதை அமைக்கும். கல்லீரல் நோய்க்கு அடிபோடும்.
ஜிம்முக்குச் செல்பவர்கள் தினமும் 2 முட்டைகளின் வெள்ளைக் கரு, பருப்பு குழம்பு, அரை லிட்டர் பால், 200 கிராம் பயறு, 300 கிராம் கோழி இறைச்சி சாப்பிடலாம்.
கூடவே, நவதானியங்கள் கலந்த சத்துமாவு 200 கிராம் சாப்பிட்டு வந்தால், தேவையான புரதம் கிடைத்துவிடும். | கைடன்ஸ்: பொதுநல மருத்துவர் கு.கணேசன்.