நீங்கள் ஒல்லியா? - இதோ ஹெல்த் டிப்ஸ்!
பொதுவாக உடல்வாகு என்பது பரம்பரையைப் பொறுத்தது. அப்பா, அம்மா ஒல்லியாக இருந்தால் வாரிசுகளும் ஒல்லியாக இருக்க அதிக வாய்ப்புண்டு.
பரம்பரை காரணமாக ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் குறை இருக்காது. இவர்கள் ‘உடல் ஒல்லியாக உள்ளதே’ என கவலைப்பட வேண்டாம்.
நன்றாக உள்ளவர் திடீரென மெலிய ஆரம்பித்தால், உடலில் தோன்றியுள்ள நோய் காரணமாக இருக்கலாம். அவர்கள் மருத்துவர்களை நாட வேண்டும்.
உடல் வளர்ச்சி சரியாக இருக்க, சரியான கலோரி அளவு உணவைச் சாப்பிடுவது முக்கியம். இதற்கு ஓர் உணவியல் நிபுணரிடம் ஆலோசிக்கலாம்.
பொதுவாக, நாள் ஒன்றுக்கு ஆணுக்கு 2,200 கலோரியும், பெண்ணுக்கு 1,800 கலோரியும் தேவை.
ஒல்லியாக இருப்பவர்கள் 1000 கலோரியைத் தருகிற அளவுக்கு உணவை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
உடலின் சீரான வளர்ச்சிக்குப் புரதச் சத்துதான் மிகவும் உதவுகிறது. தசைகள் வலுவடைய, பொலிவு பெற புரத உணவு மிக அவசியம்.
வயது, வேலையின் தன்மை, உடற்பயிற்சி போன்றவற்றை பொறுத்து ஒருவருக்கு தினமும் 50-லிருந்து 75 கிராம் வரை புரதம் தேவை.
பால், தயிர், நெய், வெண்ணெய், பாலாடை கட்டியில் புரதம் மிகுந்துள்ளது. அரிசி, கோதுமை, சோளம் போன்ற தானியங்களிலும் ஓரளவு புரதம் உள்ளது.
முட்டை, மீன், இறைச்சி, நிலக்கடலை, சோயா, பருப்பு, முந்திரி, பீன்ஸ், அவரை, துவரை, உளுந்து, சுண்டல் போன்றவை புரதம் நிறைந்த உணவுகள்.
சைவ உணவில் உளுத்தம் பருப்பில் புரதம் மிக அதிகம். ஆகவே, உளுந்த வடை, ஜிலேபி, இட்லி பொடி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்க்கலாம்.
தினமும் ஏதேனும் ஒருவகை பருப்புக் குழம்பு அல்லது பருப்பு சாம்பார், சிறுகீரை பருப்புக் கூட்டு அவசியம்.
வாரம் இரு முறை இறைச்சி அல்லது மீன் சாப்பிட வேண்டும். தினமும் அரை லிட்டர் பால் குடிக்க வேண்டும்.
உடல் தசைகள் பொலிவு பெற சிறிதளவு கொழுப்பும் தேவை. இதை நெய், வெண்ணெய், எண்ணெய், தயிர், ஆட்டிறைச்சி, முட்டை போன்ற உணவில் பெறலாம்.
சத்துக் குறைவு காரணமாக உடல் ஒல்லியாக இருப்பவர்கள்தான் நம்மிடம் அதிகம். இதற்கு, வறுமைச் சூழல் மிக முக்கிய காரணம்.
ஒல்லியானவர்களுக்கு உடற்பயிற்சி தேவையா என்ற சந்தேகமே வேண்டாம். நன்றாகப் பசி எடுக்க உடற்பயிற்சி உதவும். | தகவல்கள்: பொதுநல மருத்துவர் கு.கணேசன்