காதுகளை அசைப்பது ஏன்? - யானை: சில தகவல்கள்
நிலத்தில் வாழும் உயிர்களில் மிகப் பெரிய பாலூட்டியான யானைகளில் 2 வகைகள் உள்ளன. ஆசிய யானை, ஆப்பிரிக்க யானை.
ஆப்பிரிக்க யானைகளில் பெண், ஆண் இரண்டுக்கும் தந்தங்கள் உண்டு. ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தங்கள் உண்டு.
பெண் யானைகளுக்கு 12 வயதாகும்போது, குட்டிகளை ஈனத் தொடங்குகின்றன. யானைகளின் கர்ப்ப காலம் 22 மாதங்கள்.
யானைகளால் தந்தங்களைப் பயன்படுத்தி, நிலத்தடி நீரையும் தோண்டிப் பருக முடியும்.
யானைகள் தாவர உண்ணிகள். இலைகள், கிளைகள், மூங்கில்கள் மற்றும் வேர்பகுதிகளை உணவாக கொள்கின்றன.
யானைகளின் பெரிய - மெல்லிய காதுகள் அமைந்துள்ள ரத்தத் தமனிகள்தான் உடல் வெப்பநிலையைச் சீராக வைக்கின்றன.
உஷ்ணமான தட்ப வெட்ப நிலையில் காதுகள் வழியாகப் பயணிக்கும் ரத்தம்தான் யானையின் உடலைக் குளிர்விக்கிறது. இதற்காகவே காதுகளை அசைக்கின்றன.
யானையின் தும்பிக்கையால் ஒரு பொருளின் அளவு, வடிவம், வெப்ப நிலையை உணர முடியும். உணவைத் தூக்கவும், தண்ணீரை எடுத்து வாயில் ஊற்றவும் இது பயன்படுகிறது.
யானையின் தும்பிக்கை 2 மீட்டர் அளவு வளரக் கூடியது. தும்பிக்கையின் கனம் 140 கிலோ கிராம். ஒரு லட்சம் தசை நாண்களால் உருவாக்கப்பட்டது அது.
பெண் யானைகள் சேர்ந்து வாழக் கூடியவை. ஆண் யானைகள் 13 வயதில் தங்கள் மந்தையை விட்டுப் பிரிந்து சென்று தனியாக வாழத் தொடங்கும்.
யானைகள் அருமையாக நீச்சல் அடிக்கும். தும்பிக்கையை சுவாசக் குழாய் போல பயன்படுத்தி ஆழமான நீரிலும் யானைகளால் இருக்க முடியும். | தகவல்கள்: ஷங்கர்