இதயம் காக்க 10 நலக் குறிப்புகள்!
இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதயத்தைப் பாதுகாக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்வது அவசியம்.
நாளொன்றுக்கு 3 வேளை அதிகமாக உண்பதைவிட, சிறிது சிறிதாகப் பலமுறை உண்பது நல்லது. தூங்கச் செல்வதற்கு 2-3 மணி நேரத்துக்குமுன் சாப்பிட்டுவிட வேண்டும்.
தண்ணீர் அதிகம் பருக வேண்டும். இரவில் சர்க்கரை, தயிர் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். பீட்சா, பர்க்கர் போன்ற பாஸ்ட்ஃபுட் உணவுகள் இதயத்துக்கு ஆகாது.
தினமும் குறைந்தது 5 முறை பழங்களையும் காய்கறிகளையும் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. எண்ணெய்யில் பொரித்த மீனையும் இறைச்சியையும் தவிர்ப்பது நல்லது.
உணவில் அதிகப்படியான உப்பைச் சேர்த்துக்கொள்வது ரத்த அழுத்தத்தை உருவாக்கும். உணவைச் சமைத்த பின், அதாவது சாப்பிடும்போது உப்பைச் சேர்க்கக் கூடாது.
வால்நட், கிரீன் டீ போன்றவற்றை வாரத்துக்கு 2 முறையும், பாதாம் பருப்பை வாரத்துக்கு 2-3 முறையும் உட்கொள்வது நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.
ஒமேகா 3 அதிகம் உள்ள மீன் வகைகளைச் சாப்பிட வேண்டும். இதனால் ரத்த நாளங்களில் ரத்தம் உறைவது தடைபடும், மாரடைப்பு ஏற்படும் ஆபத்து நீங்கும்.
கொழுப்பால் உண்டாகும் அடைப்புக்கு அத்திரோமா என்ற பெயர். போதிய உடல் உழைப்பும் உடற்பயிற்சியும் இல்லாமல் இருப்பதே உடலில் கொழுப்பு சேர்வதற்கு முக்கியக் காரணம்.
நல்லெண்ணெய் மிகவும் சிறந்தது. இதில் PUFA வகைக் கொழுப்பு உள்ளது. இந்தக் கொழுப்பு உடலுக்கு நல்லது.
பாமாயிலில் அடர் கொழுப்பு என்பதால் அதை தவிர்ப்பது நல்லது. | தகவல்கள்: டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி