வரிப் புலிகள் - சில வரி வியத்தகு தகவல்கள்
நாம் நினைப்பதற்கு மாறாக வேங்கைப் புலி மிகவும் கூச்சச் சுபாவம் கொண்ட ஓர் உயிரினம். உள்ளடங்கிய காட்டுப் பகுதியிலேயே வாழும்.
Tigris என்ற கிரேக்கச் சொல்லில் இருந்துதான் Tiger என்ற பெயர் வந்தது. அதற்கு அம்பு என்று அர்த்தம். அம்பைக் குறிக்கும் வகையில் வைக்கப்பட்டிருக்கலாம்.
நமது கைரேகைகள் ஒவ்வொரு வருக்கும் மாறுபடுவதைப் போல, ஒவ்வொரு புலியின் உடலில் உள்ள வரிகளும் வித்தியாசமானவை. இவற்றை அடிப்படையாக அடையாளம் காண முடியும்.
வேங்கைப் புலியின் காலடித் தடத்தைக் கொண்டு ஒரு வேங்கையின் வயது, பாலின வேறுபாடு, எடை, உயரம் போன்ற விஷயங்களைக் கணிக்க முடியும்.
வேங்கைப் புலிகள் நடந்து செல்லும்போது, தங்கள் உகிர்களை (கூர்நகங்களை) உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. இதனால் அவற்றின் காலடித் தடத்தில் நகங்கள் இருக்காது.
அழகான சிவப்பு ஆரஞ்சு மயிர்ப்போர்வையின் மீதான வரிகளைக் கொண்ட தோலே, வேங்கைக்கு எதிரியாகிவிட்டது. ராஜாக்கள் முதல் சாமியார்கள் வரை இந்தத் தோலுக்கு அடிமை.
வயது, இரை கிடைக்கும் தன்மை, காட்டின் சூழல் காரணமாகச் சில வேங்கைப் புலிகள் ஆட்கொல்லிகளாக மாறிவிடுகின்றன. இப்படிப்பட்ட புலிகள் அரிதானவை.
சாதாரணமாக எந்தத் தனிப்பட்ட காரணமும் இல்லாமல், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் நோக்கத்துடனேயே வேங்கைப் புலிகள் மனிதனைத் தாக்குகின்றன.
ஒரு வேங்கையின் உறுமலை 3 கி.மீ. சுற்றளவுக்குக் கேட்க முடியும். வேங்கைகள் இரவில் வேட்டையாடும். இரவில் அவற்றுக்குப் பார்வை நன்றாகத் தெரியும்.
ஒரு வேங்கைப் புலி ஒரு முறைக்கு அதிகபட்சம் 27 கிலோ வரை உண்ணக்கூடும். சராசரியாக 5 கிலோ இரையை உண்ணும். | தொகுப்பு: ஆதி