காலை உணவை தவிர்த்தால்..? - சித்த மருத்துவ அலர்ட் குறிப்புகள்
காலை உணவை அடிக்கடி தவிர்த்தால், உணவில் இருந்து உடலுக்குத் தேவையான குளுக்கோஸை கிரகிக்க உதவும் கணையத்தில் இருந்து சுரக்கும் இன்சுலின் சுரப்பு பாதிக்கும்.
காலை உணவை தொடர்ந்து தவிர்த்தால், நம் சர்க்கரையைப் பயன்படுத்தக் கூடிய திறன் இன்சுலினுக்கு இல்லாமல் போகும்; ரத்தத்தில் சர்க்கரை அதிகரித்து, நீரிழிவு வரலாம்.
நாம் காலை உணவைக் கண்டிப்பாக ஒதுக்கக் கூடாது என்பதையே தற்போதைய ஆராய்ச்சிகளும் முடிவுகளும் வலியுறுத்துகின்றன.
அதேபோல் காலை உணவை அவசர அவசரமாக வாயில் திணிப்பதும் தவறு. நன்றாக மென்று சாப்பிட்டால்தான் உணவு நன்கு செரிமானம் ஆகும்.
நன்கு மென்று, மெதுவாகச் சாப்பிடும்போது பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் நம் மூளைக்கு ‘போதும்’ எனும் கட்டளையை பிறப்பிப்பதாக ஆய்வு சொல்கிறது.
தொப்பையைக் குறைக்க விரும்புவோர் சரியான நேரத்துக்கு, சரியான உணவை - முக்கியமாகக் காலை உணவைத் தவிர்க்காமல் குறிப்பிட்ட அளவில் மட்டும் சாப்பிடுவது நன்மை தரும்.
காலையில் சரியான நேரத்துக்கு நன்கு உணவு உண்டால், அன்றைய வேலைகளைச் சிறப்பாகச் செய்யக் கூடிய ஆற்றல் நம் உடலுக்குக் கிடைக்கும்.
மதிய உணவை, காலை உணவின் அளவை விட குறைவாக உண்டால் ‘உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு’ எனும் பழமொழியில் சிக்காமல், வேலைகளில் கவனம் செலுத்தலாம்.
இரவு நேரத்தில் மிதமாக உணவு உட்கொண்ட பின் உறங்கச் செல்லும்போது, எந்தவித செரிமானத் தொந்தரவும் இல்லாமல் நல்ல உறக்கம் வரும்.
காலை வேளையில் பயறு வகைகள், கடலை, உளுந்து, எள்ளு, மொச்சை உணவு வகைகளை, கடுகு, மிளகு, சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றுடன் இணைத்து உட்கொள்ளலாம்.
மதியம் வேளையில் கிழங்கு வகைகள், பழ வகைகள், கீரைகள், தயிர், மோர் போன்ற உணவு வகைகளை உட்கொள்ளலாம். இவற்றிலும் பெருங்காயம், மிளகு சேர்த்து சமைக்கலாம்.
இரவு வேளையில் அவரைப் பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, வேகவைத்த உணவு வகைகள் போன்ற எளிதில் செரிக்கக் கூடிய உணவை உண்ண வேண்டும்.