ஈசல்கள் அறிவீரா? - 10 வாழ்வியல் குறிப்புகள்

ஈசல்கள் மழைக்காலத்தில் புற்றிலிருந்து வெளியில் வந்து கூட்டமாகப் பறக்கும். வெயிலோ காற்றோ இல்லாத ரம்மியமான வானிலையில்தான் ஈசல்கள் புற்றுகளிலிருந்து வெளியேறுகின்றன.

ஈசல்கள் வானிலையை நன்கு கணிக்கும். அவற்றின் சிறகுகளால் பெருங்காற்றையோ மழையையோ எதிர்த்துப் பறக்க இயலாது. எனவே, அதற்கேற்ற சூழலை அறிந்தே வெளியேறுகின்றன.

ஈசல்களால் ஒரே நேரத்தில் அதிகப்படியாகப் பறக்க இயலாது. வெளிவந்த சில மணி நேரத்துக்குள் சிறகுகள் பெரும்பாலும் உதிர்ந்து விழுந்துவிடுகின்றன; உதிர்ந்ததும் நிலத்தில் புழுக்களாக ஊர்ந்து அலைகின்றன.

உடனடி இரை: இவை நிலத்தின் மேற்பகுதியில் பறக்கும் மிகக் குறைந்த நேரத்திலும் பறவைகளாலும் ஊர்வனவற்றாலும் பிடித்து உண்ணப்படுகின்றன. 

மீன்பிடிப் பறவைகள், ஈசல்கள் பறப்பதைக் கவனித்துவிட்டால் ஈசல்களைப் பிடிக்க உடனே தரையிறங்கி விடும். கொழுப்பும் புரதமும் நிரம்பிய, சுவையான, எளிதில் பிடிபடக் கூடியவையாக இருப்பதே காரணம்.  

புறா, கோழி, காடை, மயில், ஓணான், எறும்பு என ஊர்வனவும் பறப்பனவும் ஒரே இடத்தில் ஈசல்களைப் பிடிப்பதில் மும்முரமாக ஈடுபடுவது மழைக்காலத்தில் நிகழும் அழகிய இயற்கைக் காட்சி.

ஈசலின் ஆயுள்: ஒரு புற்றில் இருந்து ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கில் வெளியேறும் ஈசல்கள் மற்ற உயிரினங்களால் பெருமளவில் அழிந்து போனாலும் குறிப்பிட்ட அளவு ஈசல்கள் தப்பிப் பிழைக்கின்றன.  

 ஈசல்கள் இறகுகள் விழுந்ததும் இறந்துவிடும் என்று நினைக்கிறோம். ஆனால், அவை தங்கள் இணையைத் தேர்ந்தெடுத்து மீண்டும் பூமிக்குள் நுழைந்து, புதியப் புற்றினை ஏற்படுத்துகின்றன.

ஒரே நாளில் இறக்கை முளைத்து வெளியேறும் கறையான்கள் அன்றே இறந்து போவதில்லை. அவை பல ஆண்டுகள் உயிர் வாழும். ஈசல்கள், கறையான்களின் உள் வரிசையைச் சேர்ந்தவை.  

ஈசல்களின் வாழ்க்கை முறை நம்மை வியப்பில் ஆழ்த்தும். மனிதர்களும் ஈசல்களின்மீது கொண்ட வேட்கையால் அவற்றை வேட்டையாடி, பொறித்து உண்கின்றனர். | தொகுப்பு: த.ஜான்சி பால்ராஜ்

Web Stories

மேலும் படிக்க...