தமிழ்க் கடவுள் முருகன் - சிறப்புக் குறிப்புகள்
கடைச்சங்க காலத்துக்குப் பிறகான தொன்மங்கள் முருகப் பெருமான் தொடர்பான பல புனைவுகளை உருவாக்கி இருந்தாலும், தற்காலத்தில் முருக வழிபாடு தமிழ் மக்களின் வழிபாடாகவே காணப்படுகிறது.
உலகளாவிய நிலையில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளிலும் முருக வழிபாடு நடைபெறுகிறது.
ஆதிசங்கரர் வகுத்த ஆறு சமயங்களுள் கௌமாரம் என்பது முருகனை முழுமுதற் கடவுளாகப் போற்றிப் பின்பற்றுவதாகும்.
முருகனுடைய வரலாற்றில் குறிப்பிடப்படும் வழிபாட்டிடங்கள் பெரும்பான்மையானவை தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளன. முருக வழிபாடு என்பது தமிழ் மக்களின் வழிபாடாகவே உலகளவில் அறியப்படுகிறது.
ஐவகை நிலவகைப் பாட்டில் குறிஞ்சி நிலக் கடவுளே முருகன். குறிஞ்சி மலைப் பகுதி என்ற காரணத்தால் தான் ‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம்’ என்பது பயன்பாட்டில் உள்ளது.
தொல்காப்பியம் முருகனை சேயோன் என்று குறிப்பிடுகிறது. சேயோன் என்பது மக்கள் உயர்ந்த மலைப் பகுதியில் இருப்பவர் என்னும் பொருளையும், சிவனின் சேய் என்னும் பொருளையும் வழங்குகிறது.
முருகன் என்ற சொல், சங்க இலக்கியங்களில் வந்துள்ளது. பத்துப் பாட்டு நூல் தொகுப்பில் முதலாவதாக இடம்பெறும் திருமுருகாற்றுப்படை என்னும் நூலின் தலைப்பிலேயே ‘முருகு’ என்னும் சொல் இடம்பெற்றுள்ளது.
புறநானூற்றிலும் முருகன் என்னும் சொல்லும் முருகனைக் குறிக்கும் வேறு சொற்களும் வந்துள்ளன. மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை முதலானவற்றிலும் முருகு என்னும் சொல் வந்துள்ளது.
சிவபெருமான் நிகழ்த்தியதாகக் கூறப்படும் அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் தமிழ்நாட்டில்தான் நிகழ்த்தப்பட்டுள்ளன.
முருகன் என்கிற பெயருக்கு அழகு என்று பொருள். இப்பெயரை ஒருமுறை உச்சரிக்கும்போது முப்பெரும்தேவர்களும் அருள் வழங்க வருகிறார்கள் என்று ஆன்றோர் பெருமக்கள் கூறுவர்.
‘மு’ என்னும் எழுத்து முகுந்தனையும் (திருமால்), ‘ரு’ ருத்ரனையும் (சிவபெருமான்), ‘க’ கமலனான நான்முகனையும் (பிரம்மதேவர்) குறிப்பிடுகின்றன. | தகவல்கள்: முனைவர் முகிலை இராசபாண்டியன்