பச்சைப் பயறு பலன்கள் என்னென்ன?
புரதச் சத்தும் அமினோ அமிலமும் அதிகம் கொண்டது பச்சைப் பயறு. உடலுக்குத் தீங்கு பயக்கும் டிரான்ஸ் ஃபேட், சாச்சுரேடட் கொழுப்பு இதில் இல்லை.
உடலுக்கு அவசியம் தேவைப்படும் ஒன்பது அமினோ அமிலங்களில் லைசீன் என்ற அமினோ அமிலத்தை அதிகம் கொண்டது பச்சைப் பயறு.
நீரில் கரையக் கூடிய, நீரில் கரையாத நார்ச்சத்தை அதிகம் கொண்டிருப்பதால், சரிவிகித உணவையும் உடலுக்குத் தேவையான ஊட்டத்தையும் பராமரிக்க உதவுகிறது.
குறிப்பாக, பச்சைப் பயற்றில் இருக்கும் நீரில் கரையக் கூடிய நார்ச்சத்து, எல்.டி.எல். கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், இதய நோய்களிலிருந்து பாதுகாக்கவும் செய்கிறது.
ரத்தத்தில் மெதுவாகவும் படிப்படியாகவும் சர்க்கரைப் பொருளை வெளியிடுவதால், ரத்தச் சர்க்கரை அளவை பராமரிக்கவும் உதவுகிறது பச்சைப் பயறு.
எல்லாப் பயறு வகைகளையுமே தோலை அகற்றாமல், உடைக்காமல் பயன்படுத்துவதுதான் அதிக ஊட்டம் தரக்கூடியது. ஏனென்றால், தோலில் இரும்புச் சத்து இருக்கிறது.
பச்சைப் பயறு எளிதில் ஜீரணமாகக் கூடியது, மலத்தை இளக உதவுகிறது. வயிற்றுப் பொருமலையோ, ‘காஸை’யோ ஏற்படுத்தாது.
காலரா, தட்டம்மை, சின்னம்மையின்போது பச்சைப் பயறு ஊற வைத்த தண்ணீரைக் குடிப்பது உடலுக்கு நல்லதாகக் கருதப்படுகிறது. | தகவல்கள்: ஆதி