பொடுகு தொல்லைக்கு எளிய தீர்வுகள் என்னென்ன?
பொடுகு தொல்லையை நீக்குவதற்கு, ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன் தரும் எளிய குறிப்புகளில் ஏதாவது ஒன்றை முயற்சித்து தீர்வு காண...
வெந்தயத்தைத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால், உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும்.
வால் மிளகுத் தூளுடன் பால் சேர்த்துத் தலையில் தேய்த்துச் சில நிமிடங்கள் ஊறிய பின் குளிக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தைச் சேர்த்துக் காய்ச்சித் தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.
பாசிப்பயறு மாவு, தயிர் கலந்து தலையில் ஊறவைத்துப் பின்னர்க் குளிக்க வேண்டும்.
கற்றாழைச் சாற்றைத் தலையின் மேல் பகுதியில் நன்கு படும்படி தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
தலையில் சிறிதளவு தயிர் தேய்த்துச் சில நிமிடங்கள் கழித்துச் சீயக்காய் தேய்த்துக் குளிக்கலாம்.
வேப்பிலைக் கொழுந்து, துளசி ஆகியவற்றை மையாக அரைத்துத் தலையில் தேய்த்துச் சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.
வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர், எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் தேய்க்க வேண்டும்.
பசலை கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.
நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர், கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்துக் குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை செய்வது நல்லது.
அருகம்புல் சாறு எடுத்துத் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாகக் காய்ச்சிப் பின்பு ஆறவைத்துத் தலையில் தேய்க்கலாம்.
துளசி, கருவேப்பிலையை அரைத்து எலுமிச்சை பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்துப் பிறகு குளிப்பது நல்லது.