‘தேவதாஸ்’ முதல் ‘விடிவி’ வரை - இதயம் தொட்ட 20 காதல் படங்கள்!

தேவதாஸ் (1953) - தென்னிந்தியர்களுக்கு முதல் நம்பகமான காதலைக் காட்டிய படம். இதன் தாக்கம் தலைமுறைகள் கடந்தும் தொடர்கிறது. - ஜெயந்தன்

அன்பே வா - காதலை வைத்து விளையாடக் கூடாது என்னும் தீவிரமான விஷயத்தைக் கலகலப்பான திரைக்கதை, கச்சித நடிப்பு, அருமையான பாடல்கள் மூலம் சொன்ன படம். - அமுதன்

வசந்த மாளிகை - பாறையில் பூப்பூக்க வைத்த காதல் இது. சாவின் விளிம்புக்கு சென்றவனை காதல் மீட்டெடுக்கும் இசை உன்னதம் இந்தக் காவியம். - மானா

ராஜபார்வை - இத்தனை ஆண்டுகள் கழித்தும் ஈரம் காயாத காதல் மனம் உயிர்ப்புடன் இருக்கும் படைப்பு இது. - சந்திரமோகன்

நெஞ்சில் ஓர் ஆலயம் - மரணத்துடன் போராடும் கணவனை, காதலரின் மருத்துவமனையிலேயே சேர்க்க வேண்டிய நிலையில், அந்தக் காதலர்களின் உணர்வுப் போராட்டம். - ஜெயந்தன்

புதுக்கவிதை - யதார்த்தத்துக்கு நெருக்கமாக வந்துவிடும் ஒரு மென்மையான காதலையும், அது தந்துபோகும் வலியையும் மையமாக வைத்து ரஜினி நடித்த காதல் படம் இது. - மிது

மூன்றாம் பிறை: காதலை வெளிப்படுத்திய படங்கள் முழு நிலவாய்த் திரை வானில் ஜொலித்தாலும், காதலைத் தன் கர்ப்பத்தில் வைத்திருந்த இப்படம், தன் கொள்ளை அழகால் மனதில் நிற்கிறது. - யுகன்

ஒரு தலை ராகம் - அகநாநூறு காலம் தொடங்கி ஒருதலைக் காதலையும் அங்கீகரித்திருக்கிறது தமிழர் பண்பாடு. ஒருவர் காதலிப்பதும் காவியமாகும் என்பதைக் காட்டிய படம். - ஜெயந்தன்

கடலோரக் கவிதைகள்: கடற்கரை நிலமும், காதல் உணர்வை வெளிப்படும் நுட்பமான காட்சிமொழியும், உணர்வை உந்தித் தள்ளும் கதைக்கு உகந்த இசையும் மனத்தில் தங்கும். - ரோஹின்

புன்னகை மன்னன்: காதலின் இழப்பு தரும் வலியைக் கடந்தும் வாழ்க்கை வழி விடுமானால் மற்றொரு காதல், அந்த வாழ்க்கையை அர்த்தமாக்கும் என்பதை அற்புதமாகச் சொன்ன படம். - ம. சுசித்ரா

முதல் மரியாதை - இல்லாத உறவை இட்டுக்கட்டி ஏசிய ஊருக்கும் உறவுக்கும் தங்கள் உறவின் மேன்மையை நிரூபிக்கும் பெருந்திணைக் காதல் காவியம் - ஜெயந்தன்

மௌன ராகம் - குடும்ப அமைப்பின் அழகியலாக மணி ரத்னம் வரைந்தெடுத்த இந்தக் காதல் காவியத்தின் தாக்கம், தமிழ் சினிமாவில் இன்றும் தொடர்கிறது. - ஜெயந்தன்

அலைபாயுதே: திருமணத்துக்குப் பின் சற்றும் குறைந்திடாத அன்பால் வாழ்கிறது காதல் என்ற பெருந்தகவலைக் குறிப்பால் சொல்லிச் சென்ற இப்படம், இளம் காதலர்களின் புத்தகம் - இசக்கி

காதல் கோட்டை - ஆர்ப்பாட்டமில்லா காட்சிகளும், நடிப்பும், சஸ்பென்ஸ் எனும் அம்சத்தை காதலுக்கு இணையான உயிர்நாடியாகப் பின்னமுடியும் என்பதே இப்படத்தின் அஸ்திவாரம். - ரசிகா

காதலுக்கு மரியாதை - காதலைக் கண்ணியமாக வெளிப்படுத்தி வெற்றி கண்ட இந்தப் படம், பெற்றோருக்கு காதல் மீதிருந்த பயத்தைப் போக்கி மரியாதையை உருவாக்கியது. - கௌரி

சேது - காதலால் பித்தனாகிப் போன ஒரு துறுதுறு இளைஞனின் கதை. ஒரு படத்துக்கு அதன் முடிவு எத்தனை முக்கியமானது என்பதைக் காட்டிய படம். - ஜெயந்தன்

காதல்: மதுரையின் கடுமையான சாதிய ஏற்றத்தாழ்வுகளின் பின்னணியில் தோல்வியடைந்த ஒரு காதலுக்குப் பிந்தைய காலம் 'காதலி'ல் சொல்லப்பட்டது.

பூ: மாரியின் காதல் தமிழ் சினிமாவின் அரைவேக்காட்டுக் காதலில், இருந்து மாறுபட்டு இருந்தது. தமிழ் சினிமாவில் பெண்ணின் காதலைக் கவுரப்படுத்திய படம். - சாரதா

மரியான் - மரணத்தின் விளிம்புவரை சென்றுவிட்டால்கூட மீட்டுத் தரும் சக்தி காதலுக்கு உண்டு என உணர்த்திய படம். - நாகா

விண்ணைத் தாண்டி வருவாயா - தமிழில் வெளிவந்த வந்த மிகச் சிறந்த, நெருடல் இல்லாத முதிர்ச்சியான காதல் படங்களில் ஒன்று இது. - வினுபவித்ரா

Web Stories

மேலும் படிக்க...