சென்னையின் அறிவுச் சுரங்கங்கள்!
சென்னையில் பழமையான நூலகங்கள் இன்றும் மக்கள் பயன்பாட்டில் மகத்தான சேவையை ஆற்றி வருகின்றன. அந்த நூலகங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
எழும்பூரில் அமைந்துள்ளது நூற்றாண்டுப் பழமையான கன்னிமாரா நூலகம். இங்கு சுமார் 8,50,000 நூல்கள் உள்ளன. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகிறது.
‘உ.வே.சாமிநாதர் நூலகம்’ சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ளது. இங்கு 4,000+ நூல்கள், உ.வே.சா. எழுதிய கடிதங்கள் உள்ளன. காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகிறது.
திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது நூற்றாண்டு பழமை வாய்ந்த ‘முஹம்மதன் நூலகம்’. 18, 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 15,000+ அரிய நூல்கள் உள்ளன. காலை 11 மணி - மாலை 6 மணி.
சென்னை கல்லூரி சாலை டிபிஐ வளாகத்தில் 200 ஆண்டுகள் பழமையான ‘மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி’ நூலகம் உள்ளது. 80,000+ நூல்களும், 10,000+ பத்திரிகைகளும் உள்ளன. காலை 10 மணி - மாலை 5 மணி.
நூற்றாண்டு பழமையானது ‘அடையாறு நூலகம் - ஆராய்ச்சி மையம்’. பிரம்மஞான சபையின் மரங்களுக்கு நடுவே உள்ள இந்நூலகத்தில் 2.5 லட்சத்துக்கும் அதிகமான நூல்கள் உள்ளன. காலை 9 மணி - மாலை 5 மணி.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு எதிரே அமைந்திருக்கிறது ‘தமிழ்நாடு மாநில ஆவணக் காப்பகம்’. இந்தக் காப்பகத்துக்கு இப்போது வயது 114. முதலில் இது ‘மெட்ராஸ் ரெக்கார்டு ஆபீஸ்’ என்றழைக்கப்பட்டது.
1973-இல் ‘தமிழ்நாடு மாநில ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையரகம்’ எனப் பெயர் மாற்றம் பெற்றது. இங்கு 2.3 லட்சம்+ நூல்கள் உள்ளன. காலை 9 மணி - மாலை 5 மணி.
சென்னை வேப்பேரியில் அமைந்துள்ளது ‘பெரியார் திடல்’. இங்குள்ள ‘பெரியார் பகுத்தறிவு நூலகம்’ பல்வேறு வகை நூல்களைக் கொண்டுள்ளது. காலை 9.30 மணி - மாலை 6 மணி. - தொகுப்பு: இந்து குணசேகர், ராகா