கழுதைப்புலி: ஒரு கானகத் தோட்டி - வியத்தகு குறிப்புகள்
பாலூட்டிகளில் சொற்பமான உயிரினங்களில் மட்டுமே பெண்களால் வழிநடத்தப்படும் ‘தாய் வழி சமூகம்’ நிலவுகின்றது. திமிங்கிலம், யானை, சிங்கம், கழுதைப்புலிகள் ஆகும். பெண் தலைமைப் பொறுப்பில் இருக்கும்.
கழுதைப்புலிகளின் தாயகம் ஆப்பிரிக்கா வெப்ப நிலம். ஆப்பிரிக்கா தொடங்கி மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா உள்ளிட்ட ஆசிய வெப்பநிலப் பகுதிகளில் நான்கு வகையான கழுதைப்புலிகள் வாழ்கின்றன.
அடர்த்தியான கறுப்பு நிறத்தில் ஏழு முதல் ஒன்பதுவரை கோடுகள் கொண்ட வரிக் கழுதைப்புலிகள் இந்தியாவில் உள்ளன. அதுவும் தமிழகத்தில் முதுமலை, சத்தியமங்கலம், சீகூர், தெங்குமரகடா போன்ற காடுகளில் வாழ்கின்றன.
வரிக் கழுதைப்புலிகள் இரவாடிகள். பகலில் இவற்றை எதிர்கொள்வது அரிதிலும் அரிது. பிடரி, தோள், காதுகள், முகம் போன்றவை கறுப்பு நிறத்தில் இருப்பதால் இவற்றை எளிதில் அடையாளம் காண முடியாது.
உடலின் முன்பகுதி பெருத்தும், தொண்டை, நெஞ்சுப் பகுதி அகலமாக விரிந்தும் இருப்பதால் மூச்சுக்காற்றை வெகுவாக உள்ளிழுத்து, வேட்டைக்குப் பாயும் வலிமையைக் கழுதைப்புலிகள் பெற்றுள்ளன.
கழுதைப்புலிகள் அறுபது விழுக்காடு வேட்டையாடி உணவுத் தேவையை நிறைவேற்றிக்கொள்கின்றன! தனியாகவும், குழுவாகவும் வேட்டையாடி உண்ணும் எல்லாத் திறன்களும் கழுதைப்புலிகளுக்கு உண்டு.
காட்டில் எலும்புக் கூடுகள் சேராமல் கழுதைப்புலிகள் பார்த்துக்கொள்கின்றன. எவ்வளவு கடினமான எலும்புகளாகவிருந்தாலும் உண்டு செரிக்கும் ஆற்றல் உண்டு. கழுதைப்புலிகள் இல்லாத காடு, எலும்புகளின் காட்சிக் கூடம்.
வனப்பகுதிக்குள் குவியும் இறைச்சிக் கழிவுகளைக் கழித்துக்கட்டுவதில் கழுதைப் புலிகளின் பங்கு அளப்பரியது.
விலங்கு மந்தையில் நோயால் அவதியுறும் யானைகள், காட்டுமாடுகள், கடமான் போன்றவற்றைக் கழுதைப் புலிகள் தின்று, மந்தையில் உள்ள மற்ற விலங்குகளுக்கு நோய் பரவாமல் தடுக்கின்றன.
அடர்ந்த காட்டுக்குள் இறந்து கிடக்கும் விலங்குகளைத் தேடிப்போகும் கழுதைப்புலிகள் ஒரு வாரத்திற்கு முன்பு இறந்து, அழுகி, புழுக்கள் நெளியும் உடல் பாகத்தைக்கூடத் தின்று தீர்க்கின்றன!
கழுதைப்புலிகளுக்கு ஆகச் சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை இயற்கை கொடுத்துள்ளது. அழுகிய உணவைத் தின்பதால் எப்போதும் சகிக்க முடியாத வாசனை வீசும். இது மற்ற விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
கழுதைப்புலியின் இரண்டு காலடித் தடங்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை. பின்னங்கால் சிறுத்து மெலிந்துள்ளது. முன்னங்கால் பெரிதாக உள்ளது. அதிக எடையுள்ள உணவை இழுத்துக்கொண்டு, வசிப்பிடம்வரை சலிக்காது நடக்கும்.
தன்னைவிடவும் இரண்டு மடங்கு வலிமையான விலங்கை வேட்டையில் வீழ்த்தும் தாடையைக் கொண்ட விலங்கு கழுதைப்புலி ஒன்றே. மற்ற விலங்குகளால் தின்ன முடியாத எலும்புகளைக் கூட தின்றுவிடும்.
தனித்த ஒலியெழுப்பி தங்கள் குழுவிற்குச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளக்கூடியவை. ஐந்து சதுர கிலோ மீட்டர் தொலைவிற்குக் காடே அதிரும் குரலை எதிரொலிப்பதால் இரவில் மக்களுக்கு அச்சம் தருபவை கழுதைப்புலிகளின் குரல்.
| ஆக்கம்: கோவை சதாசிவம், சுற்றுச்சூழல் எழுத்தாளர்.