கோடைக் கால சரும நோய்களை தடுப்பது எப்படி? - மருத்துவர் ஆலோசனை
வெப்ப வியர்க்குரு: சருமத்தில் சிவப்பு நிறம் தோன்றி, அரிப்பு உண்டாகி முள் குத்துவதுபோல் இருப்பதே வியர்க்குருவின் அறிகுறி. நைலான், பாலியெஸ்டர் உடைகள், வியர்வை போன்றவற்றால் வியர்க்குரு ஏற்படலாம்.
மெல்லிய பருத்தி ஆடை, காற்றோட்டம், நிழல், அடிக்கடி நீர் பருகுதல் உள்ளிட்டவை வியர்க்குரு வராமல் தடுக்க உதவும். கோடையில் மூன்று வேளை குளியல் சருமப் பாதுகாப்புக்கு நல்லது.
சீழ் கொப்பளம் (Boul): சருமத்தின் வியர்வையில் தூசி படியும் இடத்தில் கிருமிகள் வளரக்கூடும். இதனால் சரும ரோமத்தின் வேர்ப் பகுதியில் சிறுசிறு சீழ் கொப்பளங்கள் ஏற்படலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதிகம் ஏற்படும்.
இதைக் குணப்படுத்த ஆன்டிபயாடிக் மருந்து தேவைப்படும். முறையான சரும பராமரிப்பும், அதன் சுத்தமுமே நோயைத் தடுக்கும்.
நீண்ட நாள் வியர்வையின் ஈரத்தில், பூஞ்சை, காளான் வளர்வதால், அக்குள், தொப்புள், உடல் இடுக்குகளில் வெப்பக் காலத்தில் படர்தாமரை ஏற்படும் சாத்தியம் அதிகம். மூன்று வேளை குளியலும், சரும பராமரிப்பும் அவசியம்.
தோல் அக்கி: சருமத்தில் நெருப்பு எரிவதுபோல் எரிச்சல், பின் சிவந்து, நீர்க் கொப்பளங்கள் தோன்றும். இது வலி மிகுந்ததாக இருக்கும். அக்கி அம்மை வைரஸால் ஏற்படும் இதனைத் தடுக்கத் தடுப்பூசி இருக்கிறது.
இந்த வைரஸ் குழந்தைகளைச் சின்னம்மை நோயாகத் தாக்கி, உடல் முழுவதும் கொப்பளம், அம்மைபோட்டு இரண்டு வாரத்தில் சரியாகிவிடும்.
உதடு அக்கி (எர்பிஸ் சிம்ப்ளெக்ஸ்): இது ஒரு வைரஸ் தொற்றால் ஏற்படும் சரும நோய். மேல், கீழ் உதடுகளில் ஏற்படும். இந்தத் தொற்று ஒரு முறை வந்தால் வைரஸ் கிருமி அந்த உடலில் ஆயுள் முழுக்க உயிர் வாழும்.
இதனால், ஒவ்வொரு கோடைக் காலத்திலும் உதடுகளில் வலிமிகுந்த கொப்பளத்துடன் கூடிய எரிச்சல் ஏற்படும். இது பல்லி சிறுநீரால் வருவதாகப் பாமர மக்கள் நம்புகிறார்கள், ஆனால் அது தவறு.
இதற்கு வைரஸ் எதிர்ப்பு மருந்தும், அக்கி மீது தடவக் களிம்பும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. வெயிலைத் தவிர்ப்பது மட்டுமே உதட்டில் அக்கி வராமல் தடுக்கும் வழி.
ஆக்கம்: டாக்டர் இ.சுப்பராயன், கட்டுரையாளர், முதியோர் மருத்துவர்