கோடைக் காலத்தை எதிர்கொள்வது எப்படி? - ஹெல்த் டிப்ஸ்
கோடைக் காலம். வெப்பமும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. வெப்பம் அதிகரிக்கும்போது, நமது சருமம் எதிர்வினையாற்றி, வியர்வையை வெளியேற்றி உடலைக் குளிரவைத்துவிடும்.
சருமமே நமது உடலின் மிகப்பெரிய உறுப்பு. இந்தச் சருமத்துக்கு இணையாக, அதனடியில் ‘திசு படலம்’ (Interstitial Tissues) உள்ளது. இது பல கோடித் திசுக்களை உள்ளடக்கியது.
இந்தத் திசுக்களுக்கு இடையே ‘இடைநிலை திரவம்’ உள்ளது. நமது சருமம், திசுப் படலத்தையும், அதற்கிடையில் இருக்கும் இடைநிலை திரவத்தையும் பயன்படுத்தி வெளிப்புற வெப்பம் நம்மைத் தாக்காமல் காக்கிறது.
வெப்பத் தசைப்பிடிப்பு: உடலைக் குளிர்விப்பதற்காகச் சருமம் வியர்வையை வெளியேற்றும். வியர்வை வெளியேறும்போது, சோடியம் உப்பும் அதிகமாக வெளியேறி தசைப்பிடிப்பை ஏற்படுத்தும்.
உப்புக் கரைசல் நீரை அருந்துவதன்மூலம் இந்த வலி பெருமளவில் குறையும். வெப்பத் தசைப்பிடிப்பு ஏற்படாமல் தடுக்க நிழல், நீர், மெல்லிய பருத்தி ஆடை, காற்றோட்டமான சூழல் உதவும்.
வெப்பத் தளர்ச்சி (Heat Exhaustion): வெப்பத் தளர்ச்சி, வெப்பப் பாதிப்பின் கடுமையான வடிவம். இது ஒரு மருத்துவ அவசர நிலை. வெப்பத் தளர்ச்சியால் தலைச்சுற்றல், மயக்கம் வந்து கீழே விழுதல் போன்றவை ஏற்படும்.
பாதிப்புக்கு ஆளானவரை உடனடியாக நிழல் பகுதிக்கு அழைத்துச் சென்று, உப்பு நீர் கரைசலைக் குடிக்க வைத்து, காற்றோட்டச் சூழலில் படுக்க வைத்தால் அவர் முற்றிலும் நலமாவார்.
வெப்ப மயக்கம்: வெப்பத் தாக்கம் அதிகரித்து உடல் வெப்பம் 106 டிகிரியைத் தாண்டும்போது வெப்ப மயக்கம் ஏற்படும். சருமம் சூடாக இருக்கும். தலைச்சுற்றல், எங்கு இருக்கிறோம் என்று புரியாத நிலை போன்றவை ஏற்படும்.
பாதிக்கப்பட்டவர் நிற்கமுடியாமல் மயங்கி விழுந்து, சுயநினைவையும் இழக்க நேரிடும். தசைகள் வலு இழக்கும்; இதயம் வேகமாகத் துடிக்கும்; ரத்த அழுத்தக் குறைவு ஏற்படும். இது ஓர் ஆபத்தான சூழல்.
பாதிக்கப்பட்ட நபரை வெயிலிலிருந்து நிழலுக்குக் கொண்டுசென்று, காற்றோட்ட வசதிசெய்து, குளிர்ந்த நீரை உடலில் ஊற்றி குளிரவைக்க வேண்டும். இதன்மூலம் உடலின் சூடு தணியும் | ஆக்கம்: டாக்டர் இ.சுப்பராயன்