நடைபயிற்சி: குறைந்தபட்சம் 10,000 அடிகள் நடந்தால் முழு பலன்!

நடைப்பயிற்சியால் இதயத் துடிப்பு அதிகமாகும்; இதயத் தசைநார்கள் நீட்சியடையும், வலிமைபெறும், அதன் ஆரோக்கியம் மேம்படும்; ரத்தவோட்டம் பெருகும்.

ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன், ஊட்டச்சத்து, உயிர்ச்சத்து, உப்புச்சத்து, நீர்ச்சத்து, ஹார்மோன்கள் போன்றவை அனைத்து உறுப்புகளுக்கும் கடத்தப்படும். இது அந்த உறுப்புகளை உயிர்ப்பிக்கும்.

மனிதன் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சமாகப் பத்தாயிரம் அடிகள் எடுத்துவைத்தால் மட்டுமே மேற்கூறிய நன்மைகள் கிடைக்கும், மின்தூக்கியைத் தேவையின்றிப் பயன்படுத்தக் கூடாது.

நடைப்பயிற்சியின் பயன்: நடைப்பயிற்சியில் நன்மை செய்யும் கொழுப்பு உடலில் அதிகரிக்கிறது. ரத்தக் குழாயில் தேங்கிய கெட்ட கொழுப்பை தசைகளுக்கு அனுப்பி எரியாற்றலாக மாற்ற நடைப்பயிற்சி உதவும்.

நடைப்பயிற்சி பக்கவாதம், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் பருமன், மாரடைப்பு, ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, தொப்பை, மூட்டு வலி, இடுப்பு வலி, உடல் வலி போன்றவற்றை தடுக்கிறது.

மூட்டு இறுக்கம், எலும்பு பலவீனம், தசைநார் பலவீனம், கூன் விழுதல், மூச்சிரைத்தல், தோல் சுருக்கம், முதுமை வேகம் அதிகரிப்பு, திடீர் மரணம் ஆகிய அனைத்தையும் தடுத்து நிறுத்த நடைப்பயிற்சி உதவும்.

சீரற்ற உணவு, கல்விச் சுமை, போட்டித்தேர்வு, வேலை அழுத்தம், மனஉளைச்சல், கைபேசி, தொலைக்காட்சி, துரித உணவு, குளிர்பானம் போன்றவை இளமைக் கால மாரடைப்புக்கான ஆபத்துக் காரணிகள்.

திடீர் மாரடைப்புக்கும், மருத்துவமனை வரை கொண்டு செல்ல அவகாசம் இல்லாமல் மரணம் நிகழ்வதற்கும் உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறையே காரணம்.

தசைகள் ஒவ்வொன்றும் ஒரு தனி இயந்திரம். ஓடும்போது, ஆடும்போது, ஒட்டு மொத்த 650 தசைகளும் இயங்கினால் அது ஒரு தொழிற்சாலையாக மாறும்.

கலோரியை எரியாற்றலாக மாற்றும்; கொழுப்பை முழுமையாகச் செலவழிக்கும். இது நிகழ்ந்தால், உடல் பருமனுக்கோ மாரடைப்புக்கோ வேலை ஏது? | ஆக்கம்: டாக்டர் இ.சுப்பராயன்

Web Stories

மேலும் படிக்க...