மறைந்துவரும் நரிகளின் ஊளைச் சத்தம்!

நரிகளைத் தமிழகத்தில் நேரில் காண்பது அரிதாகிவிட்டது. தற்போது தமிழகத்தின் தென்பகுதியில் சில இடங்களில் அரிதாக நரி கண்ணில் படுகிறது.

நாய்ப் பேரினத்தைச் சேர்ந்தவை நரிகள். வட இந்தியாவில் கன்ஹா, பரத்பூர் ஆகிய சரணாலயங்களில் காணப்படும் நரிகளைவிடத் தமிழக நரி சற்றே சிறிதாகக் காணப்படுகின்றன.

பள்ளத்தாக்குகள், ஆறுகள், ஏரிகள் போன்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து வாழ்கின்றன. வேளாண் பகுதிகள், மலைக் குன்றுகளை ஒட்டிய பகுதிகள், திறந்தவெளிக் காடுகளிலும் வாழ்கின்றன

தமிழில் வட்டார வழக்கில் பலவகையில் அழைக்கப்பட்டாலும் நரி, கணநரி, குறுநரி ஆகிய பெயர்கள் பதிவாகியுள்ளன.

30 ஆண்டுகளுக்குமுன் உணவு தேட வருவதற்கு முன்னும், ஓய்வெடுக்கத் தங்குமிடம் திரும்பும் வேளையிலும் நரிகள் ஊளையிட்டதைக் கேட்க முடிந்தது.

தலையை உயரே தூக்கி ஊளையிட்டபடி, ஆங்காங்கே மாறிமாறி நின்று ஊளையிடுவதை அந்தக் காலத்தில் கேட்கவும் பார்க்கவும்கூட முடிந்தது.

நரி வெப்பத்தைத் தாங்கும் தன்மை கொண்டது. மாலைப் பொழுதில் உணவுக்காக வெளிவந்து அதிகாலைப் பொழுதில் தங்குமிடத்திற்குத் திரும்பிச் சென்று ஓய்வெடுக்கும்.

குளிர்காலத்திலும் மேகமூட்ட நேரத்திலும் மனிதர்கள் நடமாடாத பகுதிகளில் வேட்டையாட வரும். வெப்ப காலங்களில் நீர் அருந்தவும், நீரில் அமரவும், குளிக்கவும் பகற்பொழுதில் வெளியே வரும்.

குட்டிகளும் எல்லையும்: பெண் நரி சற்று குறைந்த உயரம், எடையுடன் காணப்படும். ஆண்டில் எப்பொழுது வேண்டுமானாலும் குட்டிகள் ஈனும். பெண் நரி வளையில் 2-4 குட்டிகளை ஈனுகிறது.

நரி 12 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது. நீண்ட தூர ஓட்டத்திற்கு ஏற்றவாறு நரிகளின் கால்கள் நீண்டு அமைந்துள்ளன. மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் ஓடும் திறனுடையது.

நிலப்பரப்பைச் சுற்றி அடையாளங்களைக் குறிப்பதன் மூலம் தன் இணையை மற்ற இணைகளிடம் இருந்து பாதுகாக்கும். குட்டிகள் வளர்ந்து தங்கள் வாழிடத்தை நிறுவும்வரை பெற்றோருடனே வாழ்கின்றன.

உணவு: கிராமப் பகுதிகளில் வாழும் நரிகள் பெரும்பாலும் எலிகள், சில வேளைகளில் முயல்கள், வயல்வெளி நண்டுகள், பறவைகள், பூச்சிகள், பழங்கள் போன்றவற்றை உட்கொள்கின்றன.

மேய்ச்சலில் உள்ள ஆட்டு மந்தைகள், கிடை/பட்டியில் உள்ள ஆடுகள், செம்மறி ஆடுகள், குட்டிகள், வளர்ப்புக் கோழிகள், புறாக்களை இரவு நேரத்தில் கவ்வியெடுத்துச் சென்று கொன்று தின்னக்கூடியது.

காடுகளில் வேட்டையாடும் புலி முதலிய விலங்குகள் உண்டதுபோக எஞ்சியதை நரிகள் உண்ணும். இவற்றுக்கு எப்போதும் உணவுப் பஞ்சம் கிடையாது. | ஆக்கம்: டி.ஆர்.ஏ.அருந்தவச்செல்வன்

Web Stories

மேலும் படிக்க...