மனநலம் நிலைபெற உதவும் ஹிப்னாடிசம்

அறிதுயில் சிகிச்சையை (ஹிப்னாடிசம்) ஒரு முற்று முழுதான உளவியல் சிகிச்சை முறையாகக் கருத முடியாது. வெவ்வேறு உளவியல் சிகிச்சை முறைகளில், அறிதுயில் ஒரு கூறு மட்டுமே.

அறிதுயில் சிகிச்சை முறை மூன்று வகையான பிரச்சினைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. முதலாவதாக, ஒரு வலிபோக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.

இரண்டாவதாக, அறிதுயில் சிகிச்சையானது மனஅழுத்தத்துக்கு ஓரளவு பயனளிக்கிறது. மூன்றாவதாக, தூக்கமின்மையை போக்கவும் அறிதுயில் சிகிச்சை பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

உளவியலாளர்கள், மனநல மருத்துவர்கள் அறிதுயில் சிகிச்சையைப் பயன்படுத்தத் தகுதி உள்ளவர்கள். ஆனால், இவர்கள் அறிதுயில் சிகிச்சையில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

சுய அறிதுயில் - அறிதுயில் நிலையை வேறொருவரின் உதவியின்றித் தானாக எய்தவும் முடியும். இதில் இரண்டு கட்டங்கள். தசைகளைத் தளர்த்துவது, மனதை ஓர் எண்ணத்தின் மீது குவியப்படுத்துவது.

சுய அறிதுயில் முறை எளிதானது, தொடக்கத்தில் கடினமாகத் தோன்றினாலும் அதை நாளடைவில் படிப்படியாகக் கற்றுக்கொள்ள முடியும். ஆனால், ஒவ்வொரு நாளும் நேரத்தை ஒதுக்குவது முக்கியம்.

என்ன செய்ய வேண்டும்? - முதலில் ஓர் அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். இடைஞ்சல்கள் இல்லாதபடி குறைந்தபட்சம் அரை மணி நேரத்தை இதற்காக ஒதுக்கவும்.

வசதியாக அமர்ந்துகொள்ளவும். பிறகு கண்களை மூடி, மூச்சை நன்றாக உள்ளே இழுத்து, சில விநாடிகள் நெஞ்சில் தக்கவைத்திருந்து, பின் சீராக மெல்ல வெளியே விடவும். இது 5 முதல் 10 நிமிடங்கள்.

அடுத்து, தலையிலிருந்து பாதம் வரை மெதுவாகக் கவனத்தைக் கொண்டு செல்லவும். முதலில் ஒவ்வொரு தசையும் இறுக்கிப் பின் மெதுவாகத் தளர்த்த வேண்டும்.

கண்களை இறுக்கி மூடிப் பின் இமைகளைத் தளர்த்தவும். தளர்ச்சியினால் ஏற்படும் நல்லுணர்வைக் கூர்ந்து கவனிக்கவும்.

அடுத்து கழுத்தை இறுக்கவும், பின் தளர்த்தவும். சில நொடிகள் இதை அனுபவித்தபின் முகத்திலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு பாகத்திலும் ஓய்வாகக் கவனத்தைக் குவித்துப் பின் அவற்றைத் தளர்த்தவும்.

தளர்ச்சியை மிகைப்படுத்த ஒரு மின்தூக்கி கீழே போவதுபோல கற்பனை. பத்திலிருந்து ஒன்று வரை எண்ணிக்கொண்டே மேலிருந்து கீழ் நோக்கி, மின்தூக்கி மூலமாக இறங்குவதாகக் கற்பனை செய்யவும்.

எண்ணும் போதும் இன்னும் ஆழமாக, என்று கூறிக்கொண்டே இறங்கவும். ஒவ்வொரு கட்டத்திலும் கீழே போகும்போது உடல் தளர்ச்சி உணருங்கள். தேவையானால், ' அமைதி' என்று மனதுக்குள் கூறுங்கள்.

இந்தக் கட்டத்தில் மனதில் வேறு எண்ணங்கள் தோன்றக்கூடும். அவற்றை எதிர்த்துப் போராடத் தேவை இல்லை. வானில் மிதக்கும் மேகங்கள் தோன்றி மறைவதைப் போல, அவை வந்துபோகட்டும்.

பத்துப் பதினைந்து நிமிடங்களில் இந்த நிலையை அடையலாம். உடல் தளர்ச்சியையும் மன அமைதியையும் அடையப் பலருக்கு இதுவே போதுமானதாக இருக்கும். இதுவே சுய அறிதுயில் நிலை.

சூழ்நிலையால், பதற்றம் உருவாகி, சமாளிக்க முடியுமா என்ற அச்சம் தோன்றினால், “என்னால் இதைச் சமாளிக்க முடியும், அதற்கான மனவலிமை எனக்கு உண்டு” என தனக்குத்தானே கூறிக்கொள்ளலாம்.

தொடக்கத்தில் இந்தப் பயிற்சியைத் தனியாக அமைதியான இடத்தில் செய்ய ஆரம்பித்து, பின் பயணம் செய்யும்போதோ, கிடைக்கும் நேரத்திலோ சில நிமிடங்களில் இதைச் செய்துகொள்ளலாம்.

அறிதுயில் என்னும் எளிய பயிற்சி மூலம் விரக்தி, மன அழுத்தம் ஆகியவற்றை வெற்றிகொள்ளலாம்.

Web Stories

மேலும் படிக்க...