அலையாத்திக் காடுகள் எனும் இயற்கை அரண்
கடல்அலைகளைக் கட்டுப்படுத்த சதுப்புநிலக் காடுகள் உதவுகின்றன. அலையின் வேகத்தினை சீராக்கும் வேலையில் பெரும் பங்காற்றுவதால் இவை அலையாத்திக் காடுகள் என அழைக்கப்படுகின்றன.
தாவர மிதவை உயிரிகளின் உற்பத்தி ஒளி ஊடுருவும் தன்மையையும் அமிலக்காரச் சமநிலையையும் பொறுத்தது. இத்தாவரங்கள் கடல் அமிலமாவதைத் தடுக்கும் தன்மை உடையது.
கடலில் நடைபெறும் வெப்பநிலை மாறுபாட்டைத் தடுத்து கடல் நீரைக் குளிர்ச்சியாக மாற்றுவதால், இக்காடுகள் புவி வெப்பமாதலைத் தடுக்கும் பணியில் முக்கியத்துவம் பெறுகின்றன.
மீன்கள், இறால்கள், நண்டுகள் போன்ற உயிரினங்கள் அடைகாப்பதற்கும், குஞ்சுகளைப் பொரிப்பதற்குத் தகுந்த இடமாக இக்காடுகள் பயன்படுவதால் இவ்வுயிரினங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்தியாவில் 105 வகை அலையாத்தித் தாவரங்கள். இவற்றில் 40 வகை கிழக்குக் கடற்கரை பகுதிகளிலும், 27 வகை மேற்குக் கடற்கரை பகுதிகளிலும், 38 வகை அந்தமான் நிகோபார் தீவுகளிலும் காணப்படுகின்றன.
கிழக்கிந்தியக் கடற்கரை பகுதிகளில் அதிக அளவிலான அலையாத்திக் காடுகள் இருப்பதற்கு வற்றாத நதிகளும், ஆற்றுப்படுகைகளுமே காரணம்.
தமிழகத்தில் பிச்சாவரம், முத்துப்பேட்டை, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்த இயற்கைப் பாதுகாப்பு அரணால் விளையும் பயன்கள் ஏராளமானவை.
இந்தியாவில் உள்ள அலையாத்திக் காடுகளின் மொத்த அளவு 4,921 ச.கி.மீ. இதில் 6.2 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது.