தொற்றுகளை வேகமாக அழிக்கும் லேசான காய்ச்சல்: ஆய்வு
மருந்துகளைவிட வேகமாக தொற்றுகளை அழிப்பதற்கு லேசான காய்ச்சல் உதவுவதாக மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
காய்ச்சல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, மருத்துவ ஆய்வு இதழான Immunology and Inflammation-ல் வெளியிடப்பட்டுள்ளது.
மிதமான காய்ச்சலானது உடலில் உள்ள நோய்த் தொற்றை விரைவாக அழிக்க உதவுகிறது. திசுக்கள் சேதமடைவதை சரி செய்கிறது.
மருந்துகள் மூலம் கிடைக்கும் பலன்களைவிட விரைவான பலன்களை லேசான காய்ச்சல் வழங்குகிறது. விலங்குகள் மீது நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம் இது தெரியவந்துள்ளது.
இதுபற்றி கனடாவின் அல்பெர்டா பல்கலை. நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆராய்ச்சியாளரான டேனியல் பர்ரெடா சில விளக்கம் அளித்துள்ளார்.
“நமது உடலில் இயற்கையாக நடப்பதை அவ்வாறே நடக்க நாம் அனுமதித்தால் அது நல்ல விளைவுகளையே வழங்குகிறது'' என்கிறார்.
''லேசான காய்ச்சல் என்பது உடல் தன்னைத் தானே சரி செய்வதன் வெளிப்பாடு. உடலில் ஏற்படும் பிரச்சினைகளை மருந்து இன்றி சரி செய்வதற்கான வேலையை உடல் செய்கிறது” - டேனியல் பர்ரெடா
''லேசான காய்ச்சல் என்பது நம் உடலுக்கு நல்லது. அதை குணப்படுத்த மருந்துகளை எடுத்துக்கொள்வதை மக்கள் தவிர்க்கலாம்.'' - ஆராய்ச்சியாளர் டேனியல் பர்ரெடா
ஆய்வுக்காக பாக்டீரியா தொற்றை மீன்களின் உடலுக்குள் செலுத்தி, அவற்றின் செயல்பாட்டை ஆய்வு செய்தபோது, இன்னும் உறுதிபடுத்தப்பட்டது.
உடலுக்குள் இருந்தே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி, தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி, அதைக் கட்டுப்படுத்தும் பணிகளையும் லேசான காய்ச்சல் செய்கிறதாம்.