Published : 31 May 2023 06:46 AM
Last Updated : 31 May 2023 06:46 AM
நியூயார்க்: சாட்ஜிபிடி கூறிய தகவல்களை ஆதாரமாக தாக்கல் செய்த அமெரிக்க வழக்கறிஞர் மன்னிப்பு கோரினார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்டோ மாடா என்பவர் நியூயார்க் செல்வதற்காக, ஏவியான்கா நிறுவன விமானத்தில் பயணம் செய்தார். அப்போது உணவு பொருட்களை கொண்டு வரும் டிராலி அவரது கால் மூட்டு பகுதியில் மோதியது. இதில் காயம் அடைந்த ராபர்டோ ஏவியான்கா விமான நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படி நீதிபதியிடம் ஏவியான்கா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராபர்டோவின் வழக்கறிஞர் ஸ்டீவன், இதே போன்ற பல வழக்குகளில் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளை தொகுத்து 10 பக்க ஆவணமாக தாக்கல் செய்தார். அதில் டெல்டா ஏர்லைன்ஸ், கொரியன் ஏர்லைன்ஸ் உட்பட பல விமான நிறுவனங்களின் பெயர்களில் தீர்ப்பு விவரங்கள் இருந்தன. அந்த ஆதாரங்களை விமான நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதியால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இத்தகவல்கள் எங்கிருந்து பெறப்பட்டன என வழக்கறிஞர் ஸ்டீவனிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவர் தாக்கல் செய்த பதில் மனுவில், செயற்கை நுண்ணறிவு மென்பொருளான சாட்ஜிபிடி-யை பயன்படுத்தி தகவல்கள் திரட்டியதை ஒப்புக் கொண்டார். தவறான தகவல்களை வழங்கியதால் அவர் நீதிபதியிடம் மன்னிப்பு கோரினார்.
சாட்ஜிபிடி தளத்தில் ஒரு விஷயம் பற்றி தகவல் தேடினால், பல ஆதாரங்களில் இருந்து தகவல் சேகரித்து, அவற்றை செயற்கை நுண்ணறிவு மூலம் ஒன்றாக தொகுத்து, நாம் கேள்வி கேட்டதற்கு ஏற்ற வகையில் அது பதிலை உருவாக்கித் தரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தவறுக்கு வாய்ப்புள்ளது. உண்மைத்தன்மையை நாம் சரிபார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT