Published : 29 May 2023 04:57 AM
Last Updated : 29 May 2023 04:57 AM

ஏழை, எளியவர்களும் எளிதாக பயணிக்கும் வகையில் புல்லட் ரயில் சேவை இந்தியாவிலும் வரவேண்டும்: ஜப்பானில் புல்லட் ரயிலில் சென்ற முதல்வர் ஸ்டாலின் விருப்பம்

ஜப்பானின் ஒசாகாவில் இருந்து புல்லட் ரயில் மூலமாக டோக்கியோவுக்கு புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின்.

சென்னை: ஜப்பானின் ஒசாகாவில் இருந்து தலைநகர் டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். இதற்கு இணையான ரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வரவேண்டும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைந்து. அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கவும் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் சென்றுள்ளார். சிங்கப்பூரில் 25-ம் தேதி வரை இருந்த முதல்வர், அதன்பின் ஜப்பான் சென்றுள்ளார். ஒசாகா நகரில் தொழிலதிபர்களை சந்தித்து பேசினார். அங்குள்ள தொழிற்சாலைகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்நிலையில், ஒசாகாவில் இருந்து, ஜப்பான் தலைநகரான டோக்கியோவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை புல்லட் ரயிலில் சென்றார். முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றனர்.

இப்பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணம் செய்கிறேன். சுமார்500 கி.மீ. தூரத்தை இரண்டரை மணி நேரத்துக்குள் அடைந்து விடுவோம். உருவ அமைப்பில் மட்டுமின்றி, வேகம், தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வரவேண்டும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைந்து. அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

டோக்கியோ சென்ற முதல்வர் ஸ்டாலினை, ஜப்பானுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ் வரவேற்றார். ஜப்பான் வாழ் தமிழர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜப்பான் தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட வர்மக் கலை, பரதநாட்டியம், மிருதங்க இசை நிகழ்ச்சி, சிலம்பாட்டம், மயிலாட்டம், கும்மியாட்டம், தப்பாட்டம் ஆகியவற்றை முதல்வர் பார்வையிட்டார். ஜப்பானில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், தமிழ்ச் சங்கங்கள் சார்பில் நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

தமிழ் இணைய கல்விக் கழகம் மூலம் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் கற்கும் வகையில் ஜப்பானில் உள்ள வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர் சங்கம், ஜப்பான் தமிழ்ச்சங்கம் ஆகியவை முதல்வர் முன்னிலையில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

நமது அடுத்த தலைமுறையான குழந்தைகள் தமிழ் படிக்க ஊக்குவிப்பது, ஜப்பான் பள்ளிகளில் தமிழ் நூலகங்கள் அமைக்க உதவி புரிவது என பல்வேறு பணிகளை செய்து வரும் தமிழ்ச் சங்கத்தினரை பாராட்டுகிறேன்.

தமிழை காப்பது தமிழ் இனத்தையே காப்பதாகும். அதை தொடர்ச்சியாக செய்யுங்கள். அதற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும். அன்பு மிகுந்த உங்கள் வரவேற்பை எந்நாளும் மறக்க மாட்டேன். எங்கு வாழ்ந்தாலும் தாய்த் தமிழகத்தை மறக்காதீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, துறை செயலர் எஸ்.கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குனர் வே.விஷ்ணு, கலாநிதி வீராசாமி எம்.பி., ஜப்பானுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ், தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். டோக்கியோவில் இன்னும் ஓரிரு நாட்கள் தங்கி, முதலீட்டாளர்கள் உள்ளிட்டோரை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார். தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு, வரும்31-ம் தேதி சென்னை திரும்புகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x