Published : 24 May 2023 04:10 PM
Last Updated : 24 May 2023 04:10 PM
சிட்னி: ஆஸ்திரேலிய தொழில் நிறுவனங்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மூன்று நாள் பயணமாக கடந்த திங்கள் கிழமை ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடி, தனது பயணத்தின் கடைசி நாளான இன்று அந்நாட்டு தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளைச் சந்தித்தார். அப்போது, அவர் பேசியது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆஸ்திரேலிய நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பொருத்தவரை, தகவல் தொழில்நுட்பம், நிதிதொழில்நுட்பம், தொலைபேசி, செமிகண்டக்டர்ஸ், விண்வெளி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், கல்வி, மருந்து உற்பத்தி, சுகாதாரம், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு, கனிமவளங்கள், விவசாயம், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் நீங்கள் முதலீடுகளை செய்ய முடியும்.
இந்தியாவில் தொழில் தொடங்குவது தற்போது எளிதாக்கப்பட்டுள்ளது. புகார்களைக் குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்நிய நேரடி முதலீட்டுக்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன." என பிரதமர் மோடி பேசியதாக அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 13வது பெரிய வர்த்தக பங்குதாரராக ஆஸ்திரேலியா உள்ளது. கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் 2022 வரை ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா 1.07 பில்லியன் டாலர் முதலீட்டினை ஈர்த்துள்ளது. கடந்த 2022-23 நிதி ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 6.95 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 19 பில்லியன் டாலராகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT