Published : 24 May 2023 04:38 AM
Last Updated : 24 May 2023 04:38 AM
சிட்னி: இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. திறமை மிக்க இளைஞர்களை உருவாக்கும் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஜப்பான், பப்புவா நியூ கினி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இரவு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு சென்றார். அங்கு உள்ள ஒலிம்பிக் பார்க்கில் நேற்று நடந்த இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் அவர்பங்கேற்றார். இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: காமன்வெல்த், கிரிக்கெட், சமையல், ஜனநாயகம், எரிசக்தி, பொருளாதாரம், கல்வி என பல துறைகளிலும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நெருங்கிய உறவு நீடிக்கிறது. அந்த உறவு இப்போது மேலும் வலுவடைந்து வருகிறது. பரஸ்பரம் நம்பிக்கை, மரியாதையின் அடிப்படையில் இரு நாட்டு உறவு புதிய உச்சம் தொட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் இரு நாடுகள் இடையே உறவு பாலமாக திகழ்கின்றனர். இரு நாடுகளின் வர்த்தகம் விரைவில் இருமடங்காக உயர இருக்கிறது.
இரு நாடுகளையும் இந்திய பெருங்கடல் இணைக்கிறது. வாழ்க்கை முறை வெவ்வேறாக இருந்தாலும் நம்மை யோகா இணைக்கிறது. ‘மாஸ்டர் செஃப்’ சமையல் நிகழ்ச்சி, கிரிக்கெட், டென்னிஸ், திரைப்படங்கள் ஆகியவையும் நம்மை இணைக்கின்றன. தீபாவளி, பைசாகி உள்ளிட்ட பண்டிகைகள் ஆஸ்திரேலியாவில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. சிட்னிக்கு அருகே உள்ள பகுதிக்கு லக்னோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இங்கு பல தெருக்களுக்கு காஷ்மீர், மலபார் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகள் இங்கு பேசப்படுகின்றன. இரு நாட்டு மக்களையும் கிரிக்கெட் பிணைக்கிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன்வார்ன் கடந்த ஆண்டு காலமானபோது இந்தியர்கள் துக்கமடைந்தனர்.
இந்தியாவில் மனித வளம், இயற்கை வளங்கள் குவிந்திருக்கின்றன. திறமை மிக்க இளைஞர்களை உருவாக்கும் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையாக இந்தியா உருவெடுத்துள்ளது. உலகின் அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்தியர்கள் எளிய முறையில் தீர்வு காண்கின்றனர். இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா திகழ்வதாக உலக வங்கி கணித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதும் நாடு என்ற வகையில் கரோனா பெருந்தொற்றின்போது 100 நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பி பல கோடி மக்களின் உயிரை காப்பாற்றினோம். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு சென்று இந்திய மீட்பு குழுவினர் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். உலக நாடுகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்த இந்தியா தொடர்ந்து பாடுபடுகிறது.
இந்திய கல்வி நிறுவனங்கள் அளிக்கும் சான்றிதழ்களை ஆஸ்திரேலிய அரசு அங்கீகரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதேபோல, ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களின் சான்றிதழ்களும் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படும். இத்திட்டம் இரு நாடுகளின் மாணவர்களுக்கும் வரப்பிரசாதமாக அமையும். ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் புதிதாக இந்திய துணை தூதரகம் திறக்கப்படும். பரந்த மனம் கொண்ட ஆஸ்திரேலிய மக்களின் அன்பு நெகிழ வைக்கிறது. இவ்வாறு மோடி பேசினார்.
முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் பேசியபோது, ‘‘சிட்னியில் இந்திய பிரதமர் மோடிக்கு வரலாறு காணாத வரவேற்பு கிடைத்திருக்கிறது. உண்மையில் மோடிதான் ‘பாஸ்’. ஆஸ்திரேலியாவின் வளர்ச்சியில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது’’ என்று குறிப்பிட்டார்.
இரு தலைவர்களும் இணைந்து, சிட்னியில் உள்ள ஹாரிஸ் பார்க் பகுதிக்கு ‘லிட்டில் இந்தியா’ என்று பெயர் சூட்டினர். அவர்கள் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னணி தொழிலதிபர்கள், பிரமுகர்களை பிரதமர் மோடி நேற்று தனித்தனியே சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவில் முதலீடு செய்யுமாறு தொழிலதிபர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். பிரதமர் மோடியை பிரபல ஆஸ்திரேலிய பாடகர் கை செபாஸ்டின் நேற்று சந்தித்தார். அவரது தந்தை மலேசியாவை பூர்வீகமாக கொண்ட தமிழர். அவரது தாய் இந்தியாவில் வளர்ந்தவர். இதை மோடியிடம் அவர் பெருமையுடன் குறிப்பிட்டார். அப்போது இருவரும் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டு, நாட்டு’ பாடல் குறித்து சுவாரஸ்யமாக பேசினர்.
வானத்தில் ‘வெல்கம் மோடி': சிட்னியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தேசியக் கொடியுடன் ஏராளமானோர் வாகனங்களில் வலம் வந்தனர். சிறப்பு விமானம் மூலம் வானத்தில் ‘வெல்கம் மோடி' என்ற வாசகம் வரையப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இருந்தும் ‘மோடி ஏர்வேஸ்’, ‘மோடி எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் சூட்டப்பட்ட சிறப்பு விமானங்கள், ரயில்களில் இந்திய வம்சாவளியினர் சிட்னி நகருக்கு வந்து கூட்டத்தில் கலந்துகொண்டனர். மெல்போர்ன் நகரில் இருந்து 91 வயது மூதாட்டி நவமணி சந்திரபோஸ் என்பவரும் மோடியை காண வந்திருந்தார். இவரது கணவர் மறைந்த என்.எஸ்.சந்திரபோஸ், இந்திய மருத்துவ கூட்டமைப்பின் தலைவராக, தமிழக பாஜக தலைவராக இருந்தவர்.
இதற்கிடையே, மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பை சேர்ந்த 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT