Published : 28 Oct 2017 01:00 PM
Last Updated : 28 Oct 2017 01:00 PM
ஸ்பெயினிலிருந்து பிரிந்து தனிநாடாக அறிவித்துக்கொண்ட கேட்டலோனியா அரசை கலைத்து ஸ்பெயின் உத்தரவிட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள கேட்டலோனியா மாகாணம் தன்னாட்சி பெற்ற மாகாணம் ஆகும். ஸ்பெயினின் பொருளாதாரத்தில் 20 சதவீதம் கேட்டலோனியாவின் பங்களிப்பு உள்ளது.
ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா விடுதலை பெற்று தனி நாடாகிவிட்டதாக கேட்டலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தின் அதிபர் கார்லஸ் பூஜ்டியமோன் மற்றும் கேட்டலோனியா தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டனர்.
எனினும் தொடர்ந்து ஸ்பெயினுடன் நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக இந்த விடுதலைப் பிரகடனத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக பூஜ்டியமோன் அறிவித்தார்.
ஸ்பெயின் தரப்பிலிருந்து சுதந்திர நாடு கோரும் கோரிக்கையை கேட்டலோனியா தலைவர்கள் கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று கேட்டலோனியா நாடாளுமன்றம் நடத்திய வாக்கெடுப்பின் முடிவில் ஸ்பெயினிலிருந்து கேட்டலோனியா பிரிந்ததாக அறிவித்தது.
இந்த வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 70 பேர் தனி நாட்டுக்கு ஆதரவாகவும், 10 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்பெயினிலிருந்து கேட்டலோனியா பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.
கேட்டலோனியா அரசை கலைத்த ஸ்பெயின்
தன்னிச்சையாக செயல்பட்டு சுதந்திரம் அறிவித்துக்கொண்ட கேட்டலோனியா அரசை கலைத்து ஸ்பெயின் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஸ்பெயின் மேற்பார்வையில் கேட்டலோனியாவுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு நியமிக்கப்படும் என்று ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT