Published : 21 May 2023 12:13 PM
Last Updated : 21 May 2023 12:13 PM
டோக்கியோ: பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆட்டோகிராப் கேட்ட சுவாரஸ்ய நிகழ்வு ஜப்பானில் நடந்துள்ளது.
ஜப்பானின் ஹிரோஷிமாவில் நேற்று நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் அருகே அமர்ந்திருந்தார். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆரத் தழுவி வாழ்த்து கூறினார். இருவரும் சிறிது நேரம் உரையாடினர். இந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் பைடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆட்டோகிராப் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆட்டோகிராப் கேட்ட அதிபர்.. பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசும்போது, "நீங்கள் அடுத்தமாதம் அமெரிக்கா வருகிறீர்கள். ஆனால் இப்போதே எனக்கு அழுத்தம் அதிகரித்துவிட்டது. ஆம் உங்கள் பேச்சைக் கேட்க நிறைய பேர் என்னிடம் டிக்கெட் கேட்கிறார்கள்" என்றார்.
அப்போது அருகிலிருந்த ஆஸ்திரேலியா பிரதமர் ஆந்தணி அல்பனீஸ் "சிட்னியில் 20 ஆயிரம் பேர் மட்டுமே அமரக்கூடிய அரங்கில் மோடி உரையைக் கேட்க நீ, நான் எனப் போட்டிபோட்டு டிக்கெட் கேட்டு கோரிக்கைகள் வருகின்றன. தொழிலதிபர்கள், திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் எனப் பலரும் கோரிக்கை விடுக்கின்றனர். என்னால் சமாளிக்க முடியவில்லை" என்றார்.
கூடவே பைடனை நோக்கி "நான் ஒருமுறை இந்தியா சென்றிருந்தபோது மோடி பெருங்கூட்டத்தை மிக எளிதாக சமாளித்தார்" என்றார். அப்போது குறுக்கிட்ட பைடன், "நான் உங்களது ஆட்டோகிராபை பெற வேண்டும்" என்று பிரதமர் மோடியிடம் கூறியுள்ளார். இது கவனம் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT