Published : 19 May 2023 06:59 AM
Last Updated : 19 May 2023 06:59 AM
கோலாலம்பூர்: கஞ்சா கடத்தல் வழக்கில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட தங்கராஜு சுப்பையா (46) என்பவருக்கு கடந்த ஏப்ரல் 26-ம் தேதி சிங்கப்பூர் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றியது.
தங்கராஜிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றாலும் கடத்தலை செல்போன் மூலம் ஒருங்கிணைத்ததாகக் கூறி அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் கடுமையான தண்டனை வழங்கும் அளவுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என எதிர்ப்பு கிளம்பியது. என்றாலும் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் போதைப் பொருள் வழக்கில் மற்றொரு நபரை சிங்கப்பூர் அரசு நேற்று தூக்கிலிட்டது.
37 வயதான இந்நபர் தனக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அவரது கோரிக்கையை நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை நிராகரித்ததை தொடர்ந்து அந்நபர் நேற்று தூக்கிலிடப்பட்டார்.
1.5 கிலோ கஞ்சா கடத்தியதாக இந்நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அவரது குடும்பத்தினர் விருப்பத்தில் பேரில் அந்த நபரின் பெயரை சிங்கப்பூர் அரசு வெளிடவில்லை.
போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக உலக அளவில் கடுமையான சட்டங்களை கொண்டுள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாக திகழ்கிறது. அந்நாட்டில் சுமார் 500 கிராமுக்கு மேல் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இதற்கு சர்வதேச அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் இந்த எதிர்ப்புகளை மீறி சிங்கப்பூர் அரசு மரண தண்டனைகளை நிறைவேற்றி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT