Published : 17 May 2023 03:25 PM
Last Updated : 17 May 2023 03:25 PM

சிட்னியில் நடைபெற இருந்த குவாட் கூட்டம் ரத்து - ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த குவாட் அமைப்பின் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஆன்டணி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பான குவாட் அமைப்பின் கூட்டம் அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறுவதாக இருந்தது. இதில், ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டணி அல்பனீஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடோ ஆகியோர் பங்கேற்க இருந்தனர். இந்நிலையில், இந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டணி அல்பனீஸ், "இந்தக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் இல்லாமல் குவாட் மாநாடு நடைபெறாது. எனவே, கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. இதற்கு மாறாக, ஜப்பானில் நடைபெற உள்ள ஜி7 மாநாட்டின் இடையே குவாட் தலைவர்கள் தனியாக ஆலோசனை மேற்கொள்வார்கள்" என தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், ஆஸ்திரேலியாவில் அடுத்தவாரம் நடைபெற இருந்த பிரதமர் நரேந்திர மோடி உடனான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

வாஷிங்டனில் நடைபெற்று வரும் கடன் உச்சவரம்பு பேச்சுவார்த்தைகள் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கான தனது பயணத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென ஒத்திவைத்தார். இதையடுத்து, ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த குவாட் மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, இந்த வார இறுதியில் ஜப்பானில் நடைபெற உள்ள ஜி7 மாநாட்டில் குவாட் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய ஏழு பணக்கார நாடுகளின் குழுவான G7 குழுவில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இல்லை, எனினும், ஜப்பானில் நடக்கும் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x