Published : 17 May 2023 01:05 PM
Last Updated : 17 May 2023 01:05 PM
நியூயார்க்: கடலில் மூழ்கி ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த டைட்டானிக் கப்பல் பற்றிய புதிய தகவல்கள் அவ்வப்போது கேள்விகளை எழுப்பிச் செல்லும். அந்த வகையில் 1912 ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடல் பகுதியில் 3,800 மீட்டர் ஆழத்தில் முழ்கிய டைட்டானிக் கப்பலின் முழு ஸ்கேனிங் செய்யப்பட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது. இது பார்ப்பவர்களுக்கு முப்பரிமாண ( 3 D ) விளைவை வழங்குகிறது. இதனை ATLANTIC PRODUCTIONS/MAGELLAN அமைப்பு இணைந்து வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் டைட்டானிக் கப்பல் ஏன் மூழ்கியது என்ற நூற்றாண்டு கால ரகசியத்திற்கு விடை கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவின் சவுத்தாம்ப்டனில் இருந்து நியூயார்க்கிற்கு சென்ற டைட்டானிக்கின் முதல் பயணம் பனிப்பாறையில் மோதி விபத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 1,500 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
முப்பரிமாண வீடியோ குறித்து டைட்டானிக் ஆய்வாளர் பார்க்ஸ் ஸ்டீபன்சன் கூறும்போது, “ கப்பலைப் பற்றி இன்னும் பல அடிப்படை கேள்விகள் உள்ளன, அவை பதிலளிக்கப்பட வேண்டும். இந்த ஸ்கேனிங் படங்கள் டைட்டானிக் விபத்தை ஆதார அடிப்படையிலான ஆராய்ச்சியை நோக்கி நகர்த்துவதற்கான முதல் முக்கியப் படிகளில் ஒன்றாகும். இவை ஊகங்கள் அல்ல" என்று தெரிவித்துள்ளார்.
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் 1985 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து அந்த கப்பல் விரிவாக ஆராயப்பட்டது. அட்லாண்டிக் கடலின் ஆழமான பகுதியில் இருளான இடத்தில் கணப்படும் டைட்டானிக் கப்பலின் சில பகுதிகளை மட்டும் நமக்கு கேமராக்கள் காட்டியுள்ளன.
ஆனால் இந்த ஸ்கேனிங் புகைப்படங்களும், வீடியோக்களும் டைட்டானிக் கப்பலின் தெளிவான அமைப்பை நம் கண் முன் நிறுத்தியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT