Published : 16 May 2023 06:30 PM
Last Updated : 16 May 2023 06:30 PM
இஸ்லாமாபாத்: இம்ரான் கான் பொதுவெளியில் தூக்கிலிடப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் ராஜா ரியாஸ் அகமது கான் பேசும்போது, “நாடு முழுவதும் கலவர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இம்ரான் கானின் ஆதரவாளர்களின் செயலை கண்டு இந்த நாடு அவமானம் கொள்கிறது. இம்ரான் கான் பொதுவெளியில் தூக்கிலிப்பட வேண்டும். ஆனால், நீதிமன்றம் அவரை மருமகனை போல் வரவேற்கிறது. இந்த யூத ஏஜெண்டுடன், நீதிபதிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால், அவர்கள் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியிலே சேரட்டும். அந்தக் கட்சியில் சில பதவிகள் காலியாக உள்ளன. இந்த நீதிபதிகள் அந்த பதவிக்காக சண்டையிடலாம். இவர்களுக்கு பதில் ஏழைகளுக்கு நீதி அளிக்கும் நீதிபதிகள் வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ராஜா ரியாஸ் அகமது கானின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கடந்த வாரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது கட்சியினர் வன்முறையில் இறங்கினர். இந்த வன்முறை சம்பவத்தால் லாகூரில் ராணுவ அதிகாரியின் வீடு தீ வைக்கப்பட்டது தொடர்பாக இம்ரான் கான் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் 2 வாரங்களுக்கு ஜாமீன் வழங்கியது. இதற்கிடையில் இம்ரான் கானுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளை எதிர்ந்து நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT