Published : 15 May 2023 12:58 PM
Last Updated : 15 May 2023 12:58 PM
வாஷிங்டன்: அமெரிக்காவில் தனது வீடியோவுக்கான பார்வையாளர்களை அதிகரிப்பதற்காக வேண்டும் என்றே விமானத்தை விபத்துக்குள்ளாகிய யூ டியூபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைதளங்களில் யூ - டியூபர் என்பது தற்போது வருமானம் ஈட்டும் முக்கிய பணியாக மாறி வருகிறது. அந்த வகையில் தங்கள் வீடியோக்களை மக்கள் எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று யூ டியூபர்கள் சிலர் எல்லை மீறும் செயல்களில் ஈடுபடுவது வழக்கமாகி வருகிறது.
அமெரிக்காவில் நடந்த சம்பவம் இதற்கு உதாரணமாகி உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், “அமெரிக்காவைச் சேர்ந்தவர் ட்ரெவர் ஜேக்கப். முன்னாள் விமானியான இவர் 2021 ஆம் ஆண்டு தான் நடத்தி வரும் Trevor Jacob யூ டியூப் தளத்தில் 'நான் எனது விமானத்தை விபத்துக்குள்ளாக்கினேன்' என்ற தலைப்பில் வீடியோவை பதிவு செய்திருந்தார்.
இந்த வீடியோவில் சிறு விமானத்தை ஓட்டும் ஜேக்கப் மலைப் பகுதியின் மேல் அந்த விமானத்தை அப்படியே விட்டுவிட்டு பாராசூட்டிலிருந்து கீழே குதிக்கிறார்.பின்னர் அந்த சிறு விமானம் விபத்துக்குள்ளாகிறது. இக்காட்சிகள் அனைத்தையும் பதிவு செய்து ஜேக்கப் தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றினார். இதனை 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பார்த்திருக்கிறார்கள்.
இந்த வீடியோ விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ஜேக்கப் அமெரிக்க போலீஸாரால் கைது செய்யப்பட்டார். விசாரணயில் யூ - டியூப் வியூவ்ஸுக்காக இதனை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்த் அவருக்கும் 20 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் “ என்று கூறப்படுகிறது.
மேலும் ஜேக்கப்பின் தனியார் விமானி சான்றிதழும் ரத்து செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT