Published : 13 May 2023 06:23 AM
Last Updated : 13 May 2023 06:23 AM

புதிய வழக்கில் இம்ரானை கைது செய்ய தடை - இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: மே 9-ம் தேதிக்குப் பிறகு தொடரப்பட்ட எந்தவொரு புதிய வழக்கிலும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மே 17-ம் தேதி வரை கைது செய்ய தடைவிதித்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு இம்ரான் கானை இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இம்ரான் கான் நேற்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரின் பயோமெட்ரிக் அடையாளம் சரிபார்க்கப்பட்டு வழக்கமான நீதிமன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. பாதுகாப்பு காரணங்களால் வழக்கு விசாரணை இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

இம்ரான் கான் ஜாமீன் மனு நீதிபதி மியாங்குல் ஹசன் அவுரங்கசீப் மற்றும் நீதிபதி சமன் ரபத் இம்தியாஸ் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு இரண்டு வாரங்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் தெரிவித்ததற்கு அடுத்த நாளில் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

இதனிடையே பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைக்குமாறும், அந்த வழக்கு விவரங்களை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் இம்ரான் கானின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டனர்.

ஊழல் வழக்கில் 2 வாரம் ஜாமீன் பெற்ற சில நிமிடங்களில், மே 9-ம் தேதிக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட எந்தவொரு புதிய வழக்கிலும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய வரும் புதன்கிழமை வரை அதாவது மே 17-ம் தேதி வரை தடைவிதித்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x