Last Updated : 27 Oct, 2017 03:31 PM

 

Published : 27 Oct 2017 03:31 PM
Last Updated : 27 Oct 2017 03:31 PM

அப்பா... அப்பா.. எனக்கு உதவுங்கள்: மகனை இழந்த ரோஹிங்கியா அகதியின் அந்த நிமிடங்கள்

"அப்பா... அப்பா.. எனக்கு உதவுங்கள்.. இதுதான் கடலில் மூழ்குவதற்கு முன்பாக முகமதுவின் கடைசி வார்த்தைகள்"

மியான்மரிலிருந்து வங்கதேசத்து கடல் வழியாக வரும் ரோஹிங்கிய முஸ்லிம்களின் படகுகள் விபத்துக்குள்ளாவதும், அதில் அப்பாவி மக்கள் பலியாவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த விபத்துகளில் தங்களது சொந்தங்களை இழந்தவர்கள் வங்கதேசத்தின் அகதிகள் முகாம்களில் ஒவ்வொரு நாளையும் உயிரற்ற நட்களாக கடந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த செப்டம்பர் மாதம்  மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்கு தப்பிச் செல்ல முயன்ற ரோஹிங்கியாக்களின் படகு விபத்துக்குள்ளானதில் 50 பேர் பலியாகினர்.

இந்த விபத்தில் தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை இழந்த ஜாப்பர் விபத்து நடந்த நாளை விவரிக்கிறார்.

"நான் அன்றுதான் கடலை முழுமையாகப் பார்த்தேன். அது எல்லையில்லாமல் விரிந்து கொண்டிருந்தது. படகு ஓட்டுநர் ஒவ்வொருவரையும் எண்ணிக் கொண்டே படகில் ஏற்றினார். படகு சென்று கொண்டிருந்தது. அடுத்த சில மணி  நேரத்தில் வானிலை மோசமானது. மேகங்கள் நட்சத்திரங்களை மறைக்கத் தொடங்கின.

காற்று வேகமாக வீசியது. படகில் தண்ணீர் புகுவதை ஒவ்வொருவராக உணர ஆரம்பித்தோம். உப்பு நீரின் மணம் வீசியது. ஏதோ தவறாக நடக்கப் போவதை நான் உணர்ந்தேன். படகில் இருந்த குழந்தைகளுக்கு தலை சுற்றல் ஏற்பட்டு வாந்தி எடுக்கத் தொடங்கினர்.

படகு ஓட்டியிடம் யாரோ ஒருவர் இன்னும் நாம் நிலத்துக்குப் போக எவ்வளவு தூரம் உள்ளது என்று கேட்டார். அதற்கு படகு ஒட்டுநர் எனக்குத் தெரியாது என்று வெறுமையுடன் பதிலளித்தார். நான் நம்பிக்கையை இழந்தேன். படகில் இருந்தவர்கள் அல்லாவை வணங்கத் தொடங்கினார்கள்.

என் மனைவி அழ ஆரம்பித்தாள்.  நான் அவளை ஒன்றும் ஆகாது என்று சமாதானப்படுத்தினேன். அலைகள் வேகமாக வீசியது. படகில் இருந்த அனைவரும் தண்ணீர்.. தண்ணீர்.. என்று அலறினார்கள்.

என் மனைவி என்னை நோக்கி ஏன் இதனைச் செய்தீர்கள் என்று கோபமாகக் கேட்டாள். என்னிடம் பதில் இல்லை.... அவர்கள் நம்மைத் தாக்கினார்கள், நமது  நிலத்துக்கு தீ வைத்தார்கள். ஆனால் இங்கு நிலமை அதைவிட மோசமாக உள்ளது. நாம் இறக்கப் போகிறோம் என்றாள்.

படகு ஓட்டுநர் எங்களது உணவுப் பொட்டலங்களையும், பைகளையும் வெளியே போடுமாறு கூறினார்.

அந்நேரம் பசியா? உயிரா? என்பதை நிர்ணயிக்கும் நேரமாக மாறியது.

என்னிடமிருந்து உணவையும் தண்ணீர் பாட்டிலையும் கடலில் வீசினேன். எனது மூத்த மகன் முகமத் தண்ணீர் கேட்டபோது அவனை பொறுமையாக இருக்குமாறு கூறினேன். சிறிது நேரம் கழித்து படகின் இன்ஜின் பழுதாகியது.

அலைகள் படகை நாலு பக்கமும் தாக்கத் தொடங்கின. ஒரு பெரிய அலை மேல் எழும்பி படகைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. எனது மார்பில் தாங்கியிருந்த எனது குழந்தைகள் என்னைப் பிரிந்தனர். எனது மூத்த மகனின் குரல் கேட்டது 'அப்பா அப்பா என்னை  காப்பாற்றுங்கள் அதுதான் அவனது கடைசி வார்த்தைகள்'...

நான் கண் விழித்தபோது அங்கிருந்தவர்களிடம் நான் எங்கு இருக்கிறேன் என்று கேட்டேன். அவர்கள் வங்கதேசம் என்றார்கள். அன்று முழுவதும் எனது குழந்தைகளை கடற்கரையில் தேடினேன். அவர்களது உடல்கள் கரை ஒதுங்கிக் கிடந்தன.

நான் எங்கு பார்த்தாலும் எனது குழந்தைகள்தான் எனக்குத் தெரிகிறார்கள். நான் எனது மூத்த மகனை தினமும் காண்கிறேன். அவன் என் முன்னால் வந்து அமர்ந்து கொள்கிறான். இப்போதும்கூட... " என்று ஜாப்பர் தெரிவித்தார்.

மியான்மரில் பவுத்தர்களுக்கும்,  ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் நடந்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக லட்சக்கணக்கான  ரோஹிங்கியா மக்கள் வங்கதேசத்துக்கு இடம்பெயர்ந்தனர்.

இதுவரை மியான்மரிலிருந்து  வங்கதேசத்துக்கு 5 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கிய மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

தமிழில்: இந்து குணசேகர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x