Published : 10 May 2023 03:07 PM
Last Updated : 10 May 2023 03:07 PM
லண்டன்: பிரிட்டனில் முதல் முறையாக மூன்று பேரின் டிஎன்ஏக்கள் மூலம் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இக்குழந்தையின் டிஎன்ஏவில் உள்ள பெரும்பாலான பகுதிகள் அந்த குழந்தையின் பெற்றோர்கள் உடையதுதான். ஆனால் 0.1 % மட்டும் மூன்றாம் நபருடையது.
இம்மாதிரியான மருத்துவமுறை மைட்டோகாண்ட்ரியா தொடர்பான நோய்களுடன் குழந்தைகள் பிறப்பதை தடுக்கும். இந்த மருத்துவமுறையில் உலகில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. பிரிட்டனில் இம்முறையில் தற்போதுதான் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மைட்டோகாண்ட்ரியா நோய்கள் குணப்படுத்த முடியாதவை. இந்த குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகள் இறக்கும் நிலை கூட ஏற்படும். இந்த நோயால் ஏராளமான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை இழந்துள்ளன. அந்த வகையில் இம்மாதிரியான மருத்துவமுறை அக்குழந்தைகள் ஆரோக்கியமான உடல் நிலையை பெறுவதற்கு வாய்ப்பாக அமைகிறது.
மைட்டோகாண்ட்ரியா என்பது உடலின் ஒவ்வொரு செல்லிலும் உள்ள சிறிய பகுதியாகும் , இவைதான் உணவை ஆற்றலாக மாற்றுகின்றன.
குறைபாடுள்ள மைட்டோகாண்ட்ரியா உடலுக்கு சக்தியைத் தர தவறுகிறது. இதனால் மூளைச் சேதம், தசைச் சிதைவு, இதயச் செயலிழப்பு, பார்வையிழப்பு போன்றவை ஏற்படுகின்றன. பொதுவாக மைட்டோகாண்ட்ரியா தாயால் மட்டுமே கடத்தப்படுகின்றன. அந்த வகையில் மைட்டோகாண்ட்ரியல் நன்கொடை சிகிச்சையானது ஆரோக்கியமான நன்கொடையாளர் முட்டையிலிருக்கும் மைட்டோகாண்ட்ரியாவைப் பயன்படுத்துகிறது.
நன்கொடை மூலம் பிறக்கப்படும் குழந்தைகளுக்கு நிரந்தரமாக இந்த டிஎன்ஏ மாற்றம் இருக்கும். ஆனால் தோற்ற பண்புகளில் மாற்றம் இருக்காது . இது தலைமுறைகளுக்கும் கடத்தப்படும்.
பிரிட்டனில் 2015 ஆம் ஆண்டுதான் இத்தகைய குழந்தைகள் பிறக்க அனுமதிக்கும் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
எனினும், பிரிட்டனில் இந்த மருத்துவமுறையில் முதல் குழந்தை பிறக்கவில்லை. 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த ஜோர்டானிய குடும்பத்தில்தான் இம்மருத்துவம் மூலம் உலகின் முதல் குழந்தை பிறந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT