Published : 09 May 2023 06:44 PM
Last Updated : 09 May 2023 06:44 PM
மாஸ்கோ: "மேற்குலக நாடுகளால் நமக்கு எதிராக போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது" என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் ஆண்டுதோறும் வெற்றி அணிவகுப்பு நடைபெறும். அந்த வகையில் இன்றும் நடைபெற்றது.
நிகழ்வில் அதிபர் புதின் பேசும்போது, “எங்கள் தாய்நாட்டிற்கு எதிராக போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. தற்போது நடக்கும் போர் திணிக்கப்பட்டது. உக்ரைனில் சண்டையிடும் ராணுவ வீரர்கள் கையில்தான் ரஷ்யாவின் எதிர்காலம் உள்ளது.
ராணுவ வீரர்களே ஒட்டுமொத்த நாடும் உங்கள் பக்கம் உள்ளது. நாட்டின் பாதுகாப்பு இன்று உங்களை நம்பித்தான் உள்ளது. நாட்டு மக்கள் உங்களை நம்பி இருக்கிறார்கள். ரஷ்யாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் மோதலை தூண்டி விடுகின்றன. நம்மை வீழ்ச்சி அடையச் செய்வதுதான் அவற்றின் நோக்கம்.
ஆனால் நாம் சர்வதேச பயங்கரவாதத்தை முறியடித்துள்ளோம். டான்பாஸ் மக்களை பாதுகாப்போம் (கிழக்கு உக்ரைன் பகுதி) , நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வோம்” என்று பேசினார்.
முன்னதாக, இரண்டாம் உலகப் போரில் நாஜிக்கள் தோல்வி அடைந்ததுபோல் ரஷ்யா தோல்வி அடையும் என்று கீவ் நகரில் உள்ள இரண்டாம் உலகப் போர் போர் நினைவுச் சின்னம் அருகே நடந்த நிகழ்வில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா - உக்ரைன் போர்: நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்தது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ அமைப்பும், அமெரிக்காவும் ஆயுதங்களை வழங்கிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT