Published : 05 May 2023 08:02 PM
Last Updated : 05 May 2023 08:02 PM
லண்டன்: கோவிட்-19 பெருந்தொற்றால் உலக அளவில் நிலவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முக்கிய அறிவிப்பை, உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலைக் குழு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் உள்ளிட்ட நிபுணர்கள் கூறியது: “கோவிட்-19 பெருந்தொற்றின் உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக மிகுந்த நம்பிக்கையுடன் அறிவிக்கிறோம். இவ்வாறு கூறுவதால், கோவிட் 19 அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. கடந்த வாரத்தில் கோவிட் 19 பெருந்தொற்றால் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒருவர் என்ற எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டது.
தற்போதும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவிட் பெருந்தொற்றால் போராடிக்கொண்டிருக்கிறார்கள். தொற்றுக்குப் பிறகான பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் சிரமங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த வைரஸ் இங்கே இன்னமும் இருக்கிறது. தொடர்ந்து அது மக்களை கொல்கிறது. இன்னமும் அது ஒரு சவாலாகவே உள்ளது. கோவிட் பெருந்தொற்றின் புதிய வகை வைரஸ்களால் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்துள்ளன.
தற்போதைய அறிவிப்பின் முக்கிய நோக்கம் இனியும் மக்கள் இது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்பதைத் தெரிவிக்கவே. மிகுந்த எச்சரிக்கையுடனேயே இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம். தேவை எனில் மீண்டும் ஓர் அவசரக் குழுக் கூட்டத்தைக் கூட்ட நான் தயங்க மாட்டோம். கடந்த 3 ஆண்டுகளாக கோவிட் பெருந்தொற்றை தொடர்ந்து கண்காணித்து வந்த அவசரநிலைக் குழு, மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வந்துள்ளது. அந்தக் குழுவின் ஆலோசனைப்படியே, இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" என்று அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, 2019-ன் இறுதியில் சீனாவில் இருந்து பரவிய கோவிட் 19 பெருந்தொற்று, சர்வதேச சுகாதார பிரச்சினையாக உருவெடுத்தது. இந்தத் தொற்று நோய் மேலும் பரவால் தடுக்க உலகின் அனைத்து நாடுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து அமல்படுத்தின. உலக அளவில் கரோனா தொற்றால் இதுவரை 68.76 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 66 கோடி பேர் குணமடைந்தனர். சுமார் 69 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 4.43 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 5.31 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தற்போது 33,232 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பரவாமல் தடுக்கும் நோக்கில் தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து போடப்பட்டும் வருகிறது. இதுவரை 220 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கரோனா தொற்று கடந்த 2020-ம் ஆண்டு அதிக அளவில் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகும் திடீர் திடீர் என தொற்று அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT