Published : 05 May 2023 12:51 PM
Last Updated : 05 May 2023 12:51 PM
பெல்கிரெட்: செர்பியாவில் பள்ளி மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியான சோகம் முற்றிலும் அந்நாட்டிலிருந்து நீங்காத நிலையில் தற்போது மீண்டும் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர்.
செர்பியாவின் தலைநகர் பெல்கிரெட்டிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள மால்டினோவா மற்றும் டுபோனா கிராமங்களில்தான் புதிய துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், "ஆயுதம் ஏந்திய நபர் காரில் அமர்ந்து கொண்டு மால்டினோவா - டுபோனா கிராமங்களில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட குற்றவாளி இன்னமும் தலைமறைவாக இருக்கிறார். அவருக்கு 20 வயது இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவரைப் பிடிக்கும் பணியில் போலீஸார் இறங்கி உள்ளனர்" என்று செய்தி வெளியிட்டுள்ளன.
செர்பியாவின் தலைநகரான பெல்கிரெட் விரகார் பகுதியில் விளாடிஸ்லாவ் ரிப்னிகர் என்ற தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் 13 வயது மாணவர் புதன்கிழமையன்று திடீரென வகுப்பறையில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். இதில், அந்த மாணவருடன் பயின்ற 8 மாணவர்கள் பலியாகினர். மேலும், பள்ளிக் காவலர் ஒருவரும் உயிரிழந்தார்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மிகக் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களைக் கொண்ட செர்பியாவில் துப்பாக்கிச் சூடுகள் மிகவும் அரிதானவை என்றாலும் தனி நபர்கள் துப்பாக்கி வைத்திருப்பது ஐரோப்பிய நாடுகளிலேயே செர்பியாவில்தான் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment