Published : 03 May 2023 11:42 AM
Last Updated : 03 May 2023 11:42 AM

சர்வதேச ஊடக சுதந்திர குறியீடு: தரவரிசையில் 161-வது இடத்திற்கு சரிந்த இந்தியா

பாரீஸ்: சர்வதேச ஊடக சுதந்திர குறியீடு தரவரிசையில் 180 நாடுகளில் இந்தியா 161-வது இடத்திற்கு சரிந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு 150-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த ஆண்டு இந்தியாவின் ஊடக சுதந்திர நிலை சரிந்துள்ளது. பாகிஸ்தான், இலங்கையைவிட இந்தியா பின் தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஊடக செயல்பாடுகளைக் கண்காணிக்கும் அமைப்பான ரிபோர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் Reporters Without Borders (RSF) ஆண்டுதோறும் உலக நாடுகளின் ஊடக சுதந்திரம் பற்றிய தரவரிசையை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் 2002ஆம் ஆண்டில் 180 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி இந்தியா 161-வது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் கடந்த ஆண்டு 157-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 150-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மற்றொரு அண்டை நாடான இலங்கை கடந்த 2022-ல் இந்தப் பட்டியலில் 146-வது இடத்தில் இருந்த நிலையில் 2023-ல் 135-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நார்டிக் தேசங்களான நார்வே, அயர்லாந்து, டென்மார்க் நாடுகள் இந்தப் பட்டியலில் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. கடைசி மூன்று இடங்களில் வியட்நாம், சீனா, வட கொரியா நாடுகள் இடம்பெற்றுள்ளன.

ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் என்ற அமைப்பு ஒரு சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம். இது உலகம் முழுவதும் ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பது தனது லட்சியமாக அறிவித்து செயல்பட்டு வருகிறது. இதன் தலைமையகம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ளது.

சர்வதேச ஊடக சுதந்திர குறியீட்டை ஆண்டுதோறும் வெளியிட, உலக நாடுகளில் உள்ள பத்திரிகையாளர்களின் சுதந்திரத்தை ஒப்பிட்டுக் காட்டுவதே என்று இந்து அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஊடக சுதந்திரம் என்பது பத்திரிகையாளர்கள் மக்கள் நலன் கருதி தகவல்களை சேகரிக்கவும், அதைப் பகிரவும் கட்டுப்பாடுகள், அழுத்தங்கள் இல்லாமல் இருப்பதே என்று இந்நிறுவனம் வரையறுத்துள்ளது. அரசியல், பொருளாதாரம், சட்டம், சமூகம் என எவ்வித அழுத்தங்களும் இல்லாமல் செய்தியாளர்களின் உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் இல்லாமல் செய்திகளை மக்களிடம் கடத்தும் சுதந்திரமே ஊடக சுதந்திரம் எனக் கூறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x