Published : 03 May 2023 09:19 AM
Last Updated : 03 May 2023 09:19 AM
லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்குள் வெடிமருந்தை வீசியெறிந்த மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா நடைபெறவிருக்கும் நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோபாலிட்டன் போலீஸ் கூறுகையில், ”பக்கிங்காம் அரண்மனையின் வாயிலுக்கு வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி தோட்டாக்களுக்கான வெடிப்பொருளை அரண்மனைக்குள் வீசியெறிந்தார். மீண்டும் மீண்டும் அவர் அதைச் செய்தார். அவரை பாதுகாவலர்கள் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அந்தப் பொருட்களை சேகரித்து பாதுகாப்பாக வெடிக்கச் செய்தனர், மர்ம நபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நிகழ்விடத்தில் வேறு ஏதும் அசம்பாவிதம் நடைபெறவில்லை" என்றார்.
இது தொடர்பாக பிரிட்டிஷ் ஊடகங்களில் வெளியான செய்தியில், சம்பவம் நடந்தபோது அரண்மனையில் பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலியா இல்லை என்று தெரிவித்துள்ளது.
இருப்பினும் இது தொடர்பாக பக்கிங்காம் அரண்மனை தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டது. இந்நிலையில் சனிக்கிழமை நடைபெறும் முடிசூடும் விழாவிற்காக பக்கிங்காம் அரண்மனைக்கு செல்லும் வழியில் உள்ள மால் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
பக்கிங்காம் அரண்மனையில் நடைபெறும் முடிசூட்டு விழாவில் பல்வேறு நாட்டுத் தலைவர்கள், பிரபலங்கள், முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் நடந்துள்ள இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT