Published : 03 May 2023 07:26 AM
Last Updated : 03 May 2023 07:26 AM
புதுடெல்லி: நடப்பு ஆண்டின் உலக பொருளாதார வளர்ச்சியில் 50% பங்களிப்பை இந்தியாவும் சீனாவும் மட்டுமே வழங்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ‘பிராந்திய பொருளாதார கண்ணோட்டம்-ஆசியா மற்றும் பசிபிக்’ தொடர்பான ஐஎம்எப் அறிக்கை:
2022-ம் ஆண்டில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி விகிதம் 3.8% ஆக இருந்தது. இது நடப்பாண்டில் 4.6% ஆக அதிகரிக்கும். இந்த வளர்ச்சி பெரும்பாலும், இந்தியா மற்றும் சீனாவால் ஏற்படும். சர்வதேச வளர்ச்சியில் இப்பிராந்தியத்தின் பங்கு 70% ஆக இருக்கும்.
ஆசிய பிராந்தியத்தில் வளர்ந்து வரும் இருபெரும் சந்தைப் பொருளாதாரமாக இந்தியா மற்றும் சீனா உள்ளன. நடப்பு ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சியில் இந்த நாடுகளின் பங்களிப்பு 50% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டில் இப்பிராந்தியங்களின் வளர்ச்சி ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும். இருப்பினும் உலகப் பொருளாதாரத்துக்கு 2023-ம் ஆண்டு சவாலானதாகவே இருக்கும் என தெரிகிறது. பணவியல் கொள்கையில் இறுக்கம், உக்ரைன் போர் ஆகியவை உலக பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தால் வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT