Published : 29 Apr 2023 03:16 PM
Last Updated : 29 Apr 2023 03:16 PM

நெதர்லாந்தில் 550 முறை விந்து தானம் செய்த ‘தாராள பிரபு’வுக்கு நீதிமன்றம் தடை

ஹேக் (நெதர்லாந்து): ஏறத்தாழ 550 முறை விந்து தானம் செய்த நபருக்கு, ‘இனி விந்து தானம் செய்யக் கூடாது’ என்று நெர்தர்லாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர் என்ற அந்த நபர், இந்த உத்தரவை மீறி மீண்டும் விந்து தானம் செய்ய முயன்றால், அவருக்கு 1,00,000 யுரோஸ் (இந்திய மதிப்பில் ரூ.90,41,657) அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிர்வலையை ஏற்படுத்திய இந்தச் செய்தி, ஒரு தன்னார்வ அமைப்பும், ஜோனாதன் மூலம் குழந்தை பெற்ற தாய் ஒருவரும் ஹேக் நீதிமன்றத்தில் அவர் மீது தாக்கல் செய்த உரிமையியல் வழக்கு மூலம் வழியாக வெளியே வந்துள்ளது. இந்த வழக்கினை நீதிபதி ஹெஸ்லிங்க் விசாரித்தார். அவர் தனது தீர்ப்பில், "விந்து தானம் வழங்கியவர் தான் தானம் வழங்கப்போகும் பெற்றோர்களுக்கு தான் எத்தனை குழந்தைகளுக்கு அப்பா என்ற தகவலை தவறாக கொடுத்துள்ளார்.

தற்போது அந்தப் பெற்றோர்கள் அனைவரும் தங்களின் குழந்தைகள், நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகள் கொண்ட ஓர் உறவு வலையமைப்பு கொண்ட குடும்பத்தில் அங்கத்தினராக உள்ளது குறித்து கவலை அடைகின்றனர். இது அவர்களாக தேர்ந்தெடுத்தது இல்லை. இந்தத் தீர்ப்புக்குப் பின்னர், அந்த நபர் இனி யாருக்கும் விந்து தானம் செய்யக் கூடாது என்று இந்த நீதிமன்றம் தடை விதிக்கிறது. அவர் இனி விந்து தானம் செய்வது குறித்து யாரையும் தொடர்பு கொள்ளவோ, எந்த அமைப்புடன் சேர்ந்து விளம்பரம் செய்யவோ கூடாது" என்று உத்தரவிட்டார்.

ஜோனாதன் இதுவரை குறைந்தது 13 மருத்துவமனைகளுக்கு விந்து தானம் செய்துள்ளார். அதில் 11 நெதர்லாந்தில் உள்ளவை. டச்சு மருத்துவமனை வழிகாட்டுதலின்படி, ஒருவர், 13 பெண்களுக்கு அதிகமாக அல்லது 25 குழந்தைகளுக்கு மேல் பெற தனது விந்தை தானம் செய்யக் கூடாது. இது தற்செயலாக நடக்கும் இனப்பெருக்க நிகழ்வுகளைத் தடுக்கவும், எதிர்காலத்தில் விந்து தானம் மூலம் பிறந்த குழந்தைகள் தங்களுக்கு நூற்றுக்கணக்கான சகோதர, சகோதரிகள் இருப்பதை அறிந்து உளவியல் ரீதியாக பாதிப்படையாமல் இருக்கவும் உதவுகிறது.

ஜோனாதன் கடந்த 2007-ம் ஆண்டு முதல் இதுவரை 550-ல் இருந்து 600 முறை விந்து தானம் பண்ணியது தெரிய வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு அவர் நெதர்லாந்தில் உள்ள கருவுறுதல் மருத்துவமனைகளுக்கு விந்து தானம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் ஆன்லைன் மூலமாக வெளிநாடுகளுக்கு தனது சேவையினைத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு குறித்து ஜோனாதன் மூலமாக குழந்தை பெற்ற தாய் ஒருவர் கூறும்போது, “காட்டுத்தீ போல பிற நாடுகளுக்கும் பரவியிருக்கும் இந்தப் பெரிய விந்து தானத்திற்கு ஒரு முடிவு கட்டியதற்கு நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களின் நலன் கருதி, விந்து தானம் செய்யும் அந்த நபர் நீதிமன்ற உத்தவுக்கு கட்டுப்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் வழக்கு விசாரணையின்போது, கருத்தரிக்க முடியாத பெற்றேர்களுக்கு ஜோனாதன் உதவ விரும்புவதாக தெரிவித்தார். ஒரு இசைக் கலைஞரான அந்த ‘தாராள பிரபு’ தற்போது கென்யாவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x