Published : 26 Apr 2023 04:09 PM
Last Updated : 26 Apr 2023 04:09 PM
கார்ட்டூம்: சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில் போர் குற்றத்தில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் விடுதலையாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள ஆட்சி அதிகார மோதல் தற்போது உள்நாட்டு போராக மாறியுள்ளது. இதன் காரணமாக சூடானில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் சர்வதே நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட போர் குற்றவாளிகளான சூடானைச் சேர்ந்த அஹமத் ஹருனும், முன்னாள் அதிபரான ஓமர் அல் பஷிரும் சூடான் சிறையிலிருந்து வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் இருவரும் கோபர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அந்தச் சிறை உடைக்கப்பட்டு இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், ராணுவத்தினரே இருவருக்கும் உதவியதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
இதுகுறித்து போர் குற்றவாளியான அஹமத் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது, “ நாங்கள் சிறையிலிருந்து வெளியேறிவிட்டோம். நாட்டில் மீண்டும் நீதித்துறை செயல்படும்போது நாங்கள் நேரில் ஆஜராக தயாராக உள்ளோம்.” என்று பேசியுள்ளார்.
சிறையில் இருந்து வெளியேறிய இருவர் மீது ஏராளமான கொலை குற்றச்சாட்டுகளும், மனித உரிமை மீறல் வழக்குகளும் உள்ளன.
சூடான் உள் நாட்டுப் போர்: வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ராணுவ தளபதி அப்தெல் அல் பர்ஹான் மற்றும் துணை ராணுவப் படை தலைவர் மொகமத் ஹம்தன் டக்லோ ஆகியோர் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினர்.
இதற்கிடையில், கருத்து வேறுபாடு காரணமாக ராணுவ தளபதி பர்ஹான் ஆதரவு படையினருக்கும் - துணை ராணுவ (ஆர்எஸ்பி) தலைவர் டக்லோ ஆதரவு படையினருக்கும் இடையே மோதல் தொடங்கியது. இதுவே தற்போது சூடானில் உள்நாட்டு போராக மாறியுள்ளது. போரில் இதுவரை ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்க சம்பந்தப்பட்ட நாட்டின் தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சூடானில் வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்களை சாலை, விமானம் மற்றும் கடல் மார்க்கமாக பத்திரமாக வெளியேற்றும் நடவடிக்கையில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், கடந்த 4 நாட்களில் 4,000-க்கும் மேற்பட்டோர் சூடானில் இருந்து வெளியேறியுள்ளனர். ஐ.நா. படையைச் சேர்ந்த 700 பேரும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT