Published : 26 Apr 2023 01:40 PM
Last Updated : 26 Apr 2023 01:40 PM

1 கிலோ கஞ்சா கடத்திய வழக்கு: சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தங்கராஜு சுப்பையா

சிங்கப்பூர்: 1 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் சிங்கப்பூர் தமிழர் தங்கராஜு சுப்பையாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிங்கப்பூரை சேர்ந்தவர் தங்கராஜு சுப்பையா. தமிழரான இவர் 2013 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1 கிலோ கஞ்சாவை கடத்தியதாக கைது செய்யப்பட்டார். மேலும் கஞ்சா கடத்திய வழக்கில் 2018 ஆம் ஆண்டு அவருக்கு மரணதண்டனை விதித்தது சிங்கப்பூர் அரசு. இவரது மரண தண்டனை சிங்கப்பூரில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

”ஆனால் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையிலே தங்கராஜு குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவரது தொலைபேசி அழைப்புகளே இதற்கு சான்று” என்று சிங்கப்பூர் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் பலமில்லாத சாட்சிகள் இருந்தன, தங்கராஜூவுக்கு போதிய சட்ட உதவிகள் செய்யப்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மேலும் கஞ்சா கடத்தலுக்கு மரண தண்டனையா? என, தங்கராஜுவின் மரண தண்டனை சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. ஐக்கிய நாடுகள் சபையும் தங்கராஜுவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நீக்குமாறும் வலியுறுத்தியது.

இந்த நிலையில் தான் தங்கராஜு சுப்பையாவுக்கு சாங்கி சிறைச்சாலையில் இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். மேலும் சுப்பையாவின் இறப்புச் சான்றிதழையும் சிங்கப்பூர் அரசு வழங்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

போதைப் பொருட்கள் கடத்தலுக்கு மரண தண்டனை அவசியம் என்று சிங்கப்பூர் தொடர்ந்து கூறி வருகிறது. அதுவே, ஆசியாவில் குற்றமற்ற தேசமாக சிங்கப்பூரை தொடர்ந்து வைக்கும் என்றும் அந்நாட்டு அரசு கருதுகிறது. மேலும், சிங்கப்பூரில் பலரும் மரண தண்டனைகளை ஆதரிப்பதாகவும் அரசு கூறுகிறது.

கரோனா காலத்தில் மட்டும் சிங்கப்பூரில் 10 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆசிய கண்டத்திலேயே அதிக அளவில் மரண தண்டனைகள் இங்குதான் நிறைவேற்றப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x