Published : 24 Apr 2023 05:44 PM
Last Updated : 24 Apr 2023 05:44 PM
புதுடெல்லி: சூடானில் இருந்து இந்தியர்களை மீட்கும் 'ஆபரேஷன் காவேரி' திட்டம் செயல்படத் தொடங்கி உள்ளது.
சூடானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் ராணுவத் தளபதி அப்தல் ஃபதா அல் புர்ஹான் தரப்பும், துணை ராணுவப் படையாக ஆர்எஸ்எஃப் பிரிவும் (ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ்) கடும் மோதலில் ஈடுபட்டுள்ளன. அங்கு இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இது தொடர்பாக கடந்த 21 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘சூடானில் நிலவரம் மிகவும் பதற்றமாக உள்ளது. இந்திய சமூகத்தின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதில் கவனம் செலுத்திவருகிறோம். விரைவில் அங்கிருந்து இந்தியர்களை மீட்டுக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக கப்பல்களையும், விமானங்களையும் மத்திய அரசு அனுப்பி உள்ளது. சூடான் துறைமுகத்தில் உள்ள இந்திய கப்பலில் பயணிக்க சுமார் 500 இந்தியர்கள் துறைமுகத்துக்கு வந்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான 'ஆபரேஷன் காவேரி' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 500 இந்தியர்கள் சூடான் துறைமுகத்துக்கு வந்துள்ளனர். மேலும், பலர் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை தாயகம் அழைத்து வருவதற்காக நமது கப்பல்களும் விமானங்களும் தயார் நிலையில் உள்ளன. சூடானில் உள்ள நமது சகோதரர்கள் அனைவருக்கும் உதவ உறுதி பூண்டுள்ளோம்'' எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் சிக்கித் தவித்த இந்தியர்களை அங்கிருந்து மீட்பதற்காக கடந்த ஆண்டு மத்திய அரசு 'ஆபரேஷன் கங்கா' என்ற பெயரில் திட்டத்தை செயல்படுத்தியது. தற்போது, சூடானில் இருந்து இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கான திட்டத்திற்கு 'ஆபரேஷன் காவேரி' எனப் பெயரிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT